சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்னவென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1996 – 2001ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது.
கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதை தடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்தநிலையில் இன்று (நவம்பர் 10) அமைச்சர் பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில், “அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து 4 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால் 9 மாதங்கள் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது” என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
“1996-2001, 2006-2011 என இரண்டு முறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது” என்றும் பொன்முடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, “வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். அதற்குள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துவிட்டது. லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன்” என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்துவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையா?