சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததால் நாளை (நவம்பர் 2) மதுரையில் நடைபெற உள்ள காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,
“மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக முடிவெடுத்திருக்கிறேன். பட்டமளிப்பு விழாவில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று சிண்டிகேட், செனட் இரண்டிலும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதனை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டாலும் யாரிடமாவது கேட்டு தெரிந்திருக்கலாம். சங்கரய்யா 1922-ஆம் ஆண்டு பிறந்தவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அதன்பிறகு சமூகநீதி, பொருளாதார சமத்துவத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 9 ஆண்டுகாலம் சிறையில் இருந்த சுதந்திர போராட்ட வீரருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் செவிசாய்க்கவில்லை.
பல்கலைக்கழக சட்ட விதிகளை ஆளுநர் மதிக்கவில்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி பேசுகிறவர்களை ஆளுநருக்கு பிடிப்பதில்லை.
அதனால் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க மறுக்கிறார். சங்கரய்யாவுக்கு ஆளுநர் டாக்டர் பட்டம் கொடுக்க ஒப்புதல் வழங்காததற்கு காரணம் என்ன?
ஆளுநர் அந்தகாலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக செயல்படுகிறார். தினமும் பொய் சொல்வதையே ஆளுநர் தொழிலாக கொண்டுள்ளார். நடிப்பு சுதேசியாக செயல்படுகிறார்.
ஆளுநர் தேர்தலில் நின்று ஜெயித்து விட்டு தனது ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை பேசட்டும். ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…