பொன்முடி விடுதலை ரத்து: தண்டனை என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 19) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பொன்முடி தரப்பில், “லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மைத்தன்மை இல்லை. மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளனர்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், “சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லாது. வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. டிசம்பர் 21-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: நெல்லையில் நான்கு பேர் உயிரிழப்பு!
சீனியர் சிட்டிசன்களுக்கு: ஃப்ரீ பஸ் டோக்கன்கள்: பெறுவது எப்படி?
தங்கம் விலை திடீர் உயர்வு: இன்றைய நிலவரம்!