பாலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், டிலைட் பாலுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது என்று நாசர் தெரிவித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 4) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் நாசர்,
“பசும்பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.32-லிருந்து ரூ.35-ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஆவின் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும். பாலுக்கு கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி விலை நிர்ணயித்ததால், பால் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்.
பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் தடுக்க திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து ஏபிபி நாடு தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர்,
“டிலைட் பாலுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள். 1 லட்சம் மக்கள் தமிழகத்தில் டிலைட் பால் வாங்குகிறார்கள். அவர்கள் மக்கள் இல்லையா? இதை மறுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேச சொல்லுங்கள்.
இதை முதலில் அந்த ஐ.பி.எஸ் அதிகாரியை தெரிந்து கொள்ள சொல்லுங்கள். இதுமட்டுமல்லாமல், மறைமுகமாக பால் தயாரிக்கும் பாலீதீன் பைக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள்.
தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக தமிழக பாஜகவினர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.” என்றார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மெஜந்தா, சிகப்பு, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பால்வளத்துறை அமைச்சர்.
பொத்தாம் பொதுவாகப் பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதைத் திறனற்ற திமுக அரசு உணர வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
வாரிசு VS துணிவு : ரணகளமாகும் இணையம்!