டாஸ்மாக் திறக்கும் நேரம்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

அரசியல்

டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி பூரண மது விலக்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று குடும்பத்தலைவிகள், மகளிர் மற்றும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இச்சூழலில், தமிழ்நாடு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு தரப்பில் ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும்.

டெட்ரோ பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனித்தனியாக வாகனங்கள் போட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுவால் என்ன பாதிப்பு வருகிறது என்பதை படம் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அதை எல்லாம் டாஸ்மாக் கடை முன்பே சென்று போட்டுக் காண்பித்து விழிப்புணர்வு உருவாக்குவதற்கான நடவடிக்கையை தனியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் எனச் சொல்லி நடவடிக்கை எடுத்து அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

எங்கெங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா இல்லையோ அதை உடனடியாக அமைத்து நேரடியாக சென்னையிலிருந்து அதை கண்காணிக்கலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

லோக்கல் காவல்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அதற்கு அடுத்தடுத்த அதிகாரிகள் அங்கங்கே கண்காணிக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90 எம்.எல். பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை”என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது’- ஜெயக்குமார்

‘காலையில் இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம், பிராந்தி-விஸ்கி குடிக்கலாம்’- செல்லூர் ராஜு

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *