சூறைக்காற்றால் சேதமான வாழைப் பயிர்களை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் டூ வீலரில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் ஜூன் 5-ஆம் தேதி மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது.
இதில் ராமாபுரம், ஒதியடிகுப்பம், கீரபாளையம், எம்.புதூர், வெள்ளைக்கரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1000 ஏக்கர் வாழை பயிர்கள் சேதமடைந்தன.
இந்தநிலையில், தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், நேற்று (ஜூன் 6) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மதியம் 2.15 மணியளவில் தனியார் ஹோட்டலில் மதிய உணவு முடித்துவிட்டு, அவரது சொந்த தொகுதியான குறிஞ்சிப்பாடியில் வெள்ளக்கரை, ஒதியடிகுப்பம் பகுதியில் சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட சென்றார்.
சேதமடைந்த வாழை பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற அதிமுக மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி ஆகியோர் போவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
எதிர்க்கட்சியினருக்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க வேண்டும் என்று வெள்ளைக்கரை மற்றும் ஒதியடிகுப்பம் பகுதிக்கு கலெக்டர், எஸ். பி., வேளாண்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் விரைந்தார்.
ஒதியடிகுப்பம் பகுதியில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, கடலூர் திரும்ப காரில் ஏற முயன்றபோது,
“எங்கள் ஊரில் சேதமடைந்த வாழை மரங்களையும் பாருங்கள்” என கீரப்பாளையம் விவசாயிகள் அமைச்சரை பார்த்து கூச்சல் போட்டனர்.
உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து, அவர்கள் சொல்லும் பகுதிக்கு காரில் போகமுடியுமா என அமைச்சர் கேட்டார்.
கார் போவதற்கு கஷ்டம் என்று ஊர்க்காரர்கள் சொல்ல, கூட்டத்தில் இருந்த விவசாயி ஒருவரை அழைத்து” உன்னோடா டூ வீலர் எடுய்யா” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
டூ வீலரில் அமைச்சர் பயணித்ததும் அவரை தொடர்ந்து கலெக்டர், எஸ்பி மற்றும் அதிகாரிகளும் டூ வீலரில் பயணித்தனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து வருகிறார் என்ற தகவல் கேள்விப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அமைச்சர் விவசாயிகளை சந்தித்து விட்டு சென்ற பின்னர் விவசாயிகளை சந்தித்தார்.
விவசாயிகளை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு டூ வீலரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று பின்னர் காரில் ஏறி கடலூர் புறப்பட்டார் வேளாண் துறை அமைச்சர்.
வணங்காமுடி
இன்னும் ரயில் விபத்துக்கள் நடக்கும்: ஹெச்.ராஜா திடுக்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!