“அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ செஞ்சிருவோம்” – செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் மூர்த்தி

Published On:

| By Selvam

மதுரை வெள்ள நிவாரணப் பணியின் போது பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகிய இருவரும் இன்று (அக்டோபர் 26) சந்தித்துக்கொண்டனர்.

மதுரையில் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மதுரையில் நேற்று (அக்டோபர் 26) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர்கள். நீர்நிலைகள் நிரம்பியதால் பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், முல்லை நகர், செல்லூர், கட்டபொம்மன் நகர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

இந்தநிலையில், மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதேபகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

அப்போது அமைச்சர் மூர்த்தியும், செல்லூர் ராஜூவும் சந்தித்துக்கொண்டனர். செல்லூர் ராஜூ, மூர்த்தியிடம் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விளக்கினார். இதைக்கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, “அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ செஞ்சிருவோம்” என்று உறுதியளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் மழை நிவாரணப் பணிகளில் கட்சி பேதமின்றி இருவரும் பேசிக்கொண்டதை பலரும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவெக மாநாடு: விஜய்யுடன் மேடையில் அமரப்போவது யார் யார்?

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியுதவி… மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel