“நாம் ஆண்ட பரம்பரை” என்று அமைச்சர் மூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “நான் சொல்கிறேன்… நாம் ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். படித்துள்ளீர்கள்… இன்றைக்கு 2 பேர் செத்துப்போனால் பெரிதாக சொல்கிறார்கள்.
ஆனால், சுதந்திரத்திற்காக இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்தாயிரம், பத்தாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். வரலாற்றையெல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்.
ஏனென்றால், ஒரு வரலாறு இருக்கிறது. அது அழகர் கோயிலாக இருந்தாலும், திருமோகூர் கோயிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பில் கொள்ளையடித்துச் சென்றபோது, இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னால் நின்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துறையில், தொழில்துறையில் நம்மவர்கள் அன்று முன்னுக்கு இருந்த நிலையிலும்கூட படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது.
ஆனால், இப்போதுதான் அரசு வேலை வாய்ப்புகளில் படிப்படியாக நீங்கள் வந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது மனதார பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சமூக நீதி அரசு என்று பெருமைக்கொள்ளும் திமுக அரசின் அமைச்சர் சாதி ரீதியாக இப்படி பேசலாமா என சமூகவலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறி சவுமியா அன்புமணி போராட்டம்?