கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

அரசியல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மே 14 ஆம் தேதி நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பூராவும் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையை நடத்தி வருகிறது காவல்துறை.

பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் பிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் போலீசாரின் அஜாக்கிரதையால் நடந்துவிட்ட கள்ளச்சாராய சாவுகளால்   திமுக அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

விழுப்புரம் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை (மே 16) விழுப்புரம், செங்கல்பட்டு சென்று சந்திக்கவுள்ளதாக தெரிவித்த நிலையில்…  பாமக தலைவர்  அன்புமணியும் இன்று (மே 15)மாலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

இதனிடையே முதல்வர் மு.கஸ்டாலின் திடீரென இன்று (மே 15) காலை  விழுப்புரம், செங்கல்பட்டு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.  அவரது விசிட்டை தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், காவல்துறையும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்து வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மரக்காணத்தைச் சேர்ந்த அமரனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் பெற்ற வாக்குமூலத்தை தொடர்ந்து  தலைமறைவாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி முத்துவை போலீசார் தேடி வந்தனர்.

இதற்காக மூன்று தனிப்படை களத்தில் இறங்கியது. இதில் ஒரு டீம் சென்னைக்கு விரைந்தது. இதுகுறித்து மின்னம்பலத்தில் நேற்று (மே 14)  செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவல்கள் பேரல் பேரலாய் கிடைக்கின்றன. 

மேம்பாலத்திலேயே முத்துவை தூக்கிய போலீஸ் 

நேற்று இரவு தனிப்படை குழுக்களை தொடர்புகொண்ட விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, “முத்து நீதிமன்றத்தில் சரண்டராக திட்டம் போட்டுள்ளதாக தெரியுது.  அவனை விட்டுவிடாதீங்க நீதிமன்றம் போகும் முன்பே  நாம கைது செய்யணும்” என்று ஆர்டர் போட்டார்.

இதனிடையே சென்னை மார்க்கமாக சென்ற முத்து இரவோடு இரவாக  மீண்டும் விழுப்புரம் திரும்பினார். அவரது செல்போன் சிக்னல் இன்று (மே 15) காலை 9.30 மணியளவில் திண்டிவனம் மேம்பாலத்தில் ’லொக்கேஷன்’ காட்டியிருக்கிறது. தொடர்ந்து அந்த லொக்கேஷனுக்கு சென்ற டிஎஸ்பி சுனில் தலைமையிலான டீம் மேம்பாலத்திலேயே முத்துவை மடக்கி பிடித்தது.

முத்துவிடம் நடந்த விசாரணை! 

மேம்பாலத்தில் பைக்கில் வந்த முத்துவையும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தையும் கைது செய்திருக்கிறோம் என்று அங்கிருந்தே எஸ்.பி.ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை சொன்னதும் ,  ‘ஒகே அவனை மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க’ என உத்தரவிட்டார் எஸ்.பி. அதன்படியே இன்று காலை 10.30க்கு  மரக்காணம் காவல் நிலையத்திற்கு சாராய வியாபாரி முத்துவை அழைத்துச் சென்றனர் போலீஸார்.  அங்கு எஸ்பி ஸ்ரீநாதா, டிஎஸ்பி சுனில் இருவரும் முத்துவை தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

விசாரணைத் தொடங்கியதுமே கையெடுத்து கும்பிட்ட முத்து, ‘ஐயா நீங்கள் அடிச்சுப் பொளந்துடுவீங்கனுதான் ஓடி ஒளிஞ்சேன்….’ என்று பம்மியிருக்கிறார்.

‘என்னத்தடா கலந்தீங்க சாராயத்துல?’ என்று எஸ்பி கேட்க.,..‘ஐயா…  சாராயத்துல எந்த கலப்படமும் செய்யலை, கேன்ல எடுத்து வந்து என்னிடம் கொடுப்பாங்க. அதை பாக்கெட் போட்டு விற்பேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்’  என்றான் முத்து.

’சரி போலீஸுக்கு மாமூல் கொடுத்தியா, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கே?’  என்று கேட்டதும்,

“கலால் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, இன்ஸ்பெக்டர், அவரோட  டிரைவர், அதேபோல் மரக்காணம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ரைட்டர், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு என எல்லாருக்கும்  வாராவாரம் கொடுத்துடுவேங்கய்யா” என ஒரு லிஸ்டையே  படித்திருக்கிறான் முத்து.

“நாங்க  தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்துல பாதிக்கு மேல  போலீஸுக்குதான் போகும், மாசம் ஒருத்தரை கேசுக்கு சரண்டர் கொடுக்கணும். அதுக்கு வக்கீலுக்கு செலவு செய்யனும்’  என்று ஒன்னு விடாமல் வாக்குமூலம் கொடுத்தான் முத்து.

மரூர் ராஜாவும் மந்திரி மஸ்தானும்

இதையடுத்து, ’ஆமாம்… யாருக்கிட்டேர்ந்து உனக்கு சரக்கு வருது?” என்று கேட்டிருக்கிறார் எஸ்.பி.

“திண்டிவனம் திமுக 20ஆவது வார்டு கவுன்சிலர் ரம்யா கணவர் ராஜா கிட்டேர்ந்துதான். மரூர் ராஜானு சொல்லுவாங்க. அவர் ஃபவர்புல் ஆள். அமைச்சர் மஸ்தானுடன் இருப்பவர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே சாராய வியாபாரம் செய்யுறாரு.  இவர் பெரிய ஹோல்சேல் வியாபாரி. திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் மஸ்தானைப் பாத்து திமுகவுல சேர்ந்துட்டார்.  மந்திரி மஸ்தானின் மகன், மாப்பிள்ளையோடு நெருக்கமாகிட்டாரு. சாராயத் தொழிலையும் விரிவுபடுத்தினார். மரூர் ராஜா சரக்கு வண்டின்னாலே  போலீஸ் ஒதுங்கி வழி விடும்’ என்று வாக்குமூலத்தில் முத்து சொன்னதாக போலீசார் கூறிகின்றனர்.

யார் இந்த மரூர் ராஜா?

Minister Masthan with the Spurious Liquor Convict
மரூர் ராஜா

மரூர் ராஜா பற்றி நாம் திண்டிவனம் காவல்துறை வட்டாரத்தில் நமது விசாரணை லென்ஸை ’ஜூம்’ செய்தோம்.

“சாராய வியாபாரத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று இப்போது எல்லாரும் போலீஸ் மீது கை காட்டுகிறார்கள். ஆனால் அரசியல் செல்வாக்கை மீறி போலீசாரான எங்களால் என்னதான் செய்ய  முடியும்?  மரூர் ராஜாவால் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு டிஎஸ்பியும் மது விலக்கு ஏடிஎஸ்பியும் கொழுத்துபோனார்கள்.

திமுக ஆட்சியில் சில போலீஸ் அதிகாரிகளும் ஒரு அமைச்சர் குடும்பமும் கொழுத்து போகிறது.கடந்த ஆண்டு மரக்காணம் முத்துவுக்கு மரூர் ராஜா  அனுப்பி வைத்த சரக்கை போலீஸ் பிடித்தது. ஆனால்,  அமைச்சர் மஸ்தானின் மாப்பிள்ளை ரிஸ்வான் அந்த சரக்கை அழிக்காமல் உடனே  விடச் சொல்லி உத்தரவு போட்டார்.

இந்த மரூர் ராஜா சாராயம்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டத்திற்கு சென்றது. அந்த சாராயத்தை குடித்ததில் நான்கு பேர் பலியாகினர்.

போன ஏப்ரல் மாதம் மரூர் ராஜா சரக்கை அமைச்சர் மஸ்தான் குடும்பத்தை மீறி பிடிக்க முடியவில்லை என்று சென்னை மது விலக்கு அமலாக்கப் பிரிவின் ஸ்பெஷல் டீமுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். அதன்பிறகு சென்னையிலிருந்து ஸ்பெஷல் டீம் அனுப்பி வைத்தனர்.  லோக்கல் போலீசிடம் காட்ட முடிந்த செல்வாக்கை அவர்களிடம்  அமைச்சர் மஸ்தானால் காட்ட முடியவில்லை.

மரூர் ராஜா மீது குண்டாஸை தடுத்த அமைச்சர் மஸ்தான்

 18.04.2023 அன்று திண்டிவனத்தில் இருந்தார் மரூர் ராஜா, அவர் வீட்டிலிருந்த சாராய கேன்கள், பாக்கெட் போடும் மெஷின்கள் மற்றும் கார் என  ஸ்பெஷல் டீம் பறிமுதல் செய்தது. ராஜாவை கைது செய்து திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

ராஜா சிறையில்  இருந்தாலும் அவரது சாராய நெட்வொர்க்குக்கு எந்த பாதிப்பும் இல்லை.  தனது ஆட்கள் மூலம் அமைச்சர் குடும்பத்தின் ஆதரவோடு கள்ளச்சாராய சப்ளையை தடையில்லாமல் செய்து வருகிறார். இதேபோல சாராய வியாபாரிகளை கைது செய்தால் அடுத்த சில நாட்களில் குண்டாஸ் போட்டு விடுவார்கள். குண்டாஸ் போடவேண்டிய பொறுப்பு மாவட்ட எஸ்.பிக்குதான் இருக்கிறது.

ஆனால்  அமைச்சர் மஸ்தானின் அழுத்தத்தால் கைதானாலும் ராஜா மீது இன்னமும் குண்டாஸ் போட முடியவில்லை.  மேலும் கடலூர் அல்லது வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய மரூர் ராஜா… அமைச்சர் மஸ்தானின் செல்வாக்கால் இன்னமும் திண்டிவனம் கிளைச் சிறையில்தான் இருக்கிறார். ஏனெனில் கிளைச் சிறையில் கட்டுப்பாடுகள் குறைவு. 

Minister Masthan with the Spurious Liquor Convict

அமைச்சர் மஸ்தான், அமைச்சர் மகனும் செஞ்சி பேரூராட்சி தலைவருமான மொகதியார் அலி, அமைச்சர் மஸ்தானின் மாப்பிள்ளை ரிஸ்வான் ஆகிய மூவரிடமும்  கள்ளச்சாராய ஹோல் சேல் வியாபாரி மரூர் ராஜா  நெருக்கமாக இருக்கும் தகவல் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினருக்கும் கூட தெரிந்திருக்கிறது.  ‘என்ன செய்வது?’ என்று தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

என்ன செய்யப் போகிறார் முதல்வர்? 

Minister Masthan with the Spurious Liquor Convict

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, ‘இவ்விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை செய்யும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர்.

Minister Masthan with the Spurious Liquor Convict

அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  வலது பக்கம் நின்றிருந்தார் அமைச்சர் மஸ்தான். அதுமட்டுமல்ல கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலேயே ஆய்வுக் கூட்டமும் நடத்தினார் முதலமைச்சர். அந்த ஆய்வுக் கூட்டத்திலும் அமர்ந்திருந்தார் அமைச்சர் மஸ்தான்.

இந்தக் காட்சிகளைப் பார்த்து விழுப்புரம் போலீஸ் வட்டாரத்தில், “சாராய ஹோல் சேல் வியாபாரி மரூர் ராஜாவுக்கு எல்லா வகையிலும் ஆதரவு தரும் அமைச்சர் மஸ்தானை வைத்துக் கொண்டு முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். பிரஸ் மீட் செய்கிறார்” என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

அமைச்சர் மஸ்தான் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும்  உடனடியாக விசாரணை நடத்துவாரா முதல்வர்? 

-வணங்காமுடி

ஆவடி நாசருக்கு பதிலாக இன்னொரு முஸ்லிம் அமைச்சர்: ஜவாஹிருல்லா கோரிக்கை!

‘ஜிகர்தண்டா 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

+1
3
+1
4
+1
0
+1
11
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *