கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், சென்னையைச் சேர்ந்த அமைச்சருமான மா.சுப்பிரமணியன் விழாவில் கலந்து கொள்ளாதது திமுகவினர் இடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

”கோவையில் அரசு நிகழ்ச்சி நடத்தினால் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனை கூட மேடைக்கு அழைக்கும் பண்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சு.இல்லாமல் எப்படி இந்த விழாவை நடத்தினார்?” என்ற கேள்வி திமுக சீனியர் நிர்வாகிகள் வரை எதிரொலித்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சு. உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. அவருக்கு மா.சு. பின்னணியாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல ஆதரவாளர் என்று விளக்கம் அளித்தார் முதலமைச்சர்.
இந்த விவகாரத்தில், அமைச்சர் மா.சு. மீது இருக்கும் கோபத்தில் தான் அவரை அந்த விழாவுக்கு அழைக்காமல் சட்டமன்றத்துக்கு முதல்வர் செல்லச் சொன்னதாக திமுகவில் பேசப்பட்டது.
இந்தப் பின்னணியில் இன்று ஜனவரி 12ஆம் தேதி காலை முதல்வரின் அழைப்பின் பேரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றார்.
சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் மா.சு.வுடன் பேசிக் கொண்டிருந்த முதல்வர், காலை உணவை மா.சு.வுடன் சேர்ந்து சாப்பிட்டார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொந்த தொகுதியில் நடைபெற்ற, முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவில் அமைச்சர். மா.சு. கலந்துகொள்ளாதது கட்சிக்குள் வேறு விதமான யூகங்களையும் அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் தான் அமைச்சர் மா.சு.வை தன் வீட்டுக்கு வரவழைத்து அவரோடு காலை உணவு சாப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவும் புறக்கணிப்பு – அண்ணாமலை அறிவிப்பு!