நீட் மசோதா: ஒன்றிய அரசின் கேள்விகள்- பதில்கள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் தமிழ்நாடு அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளார்.

தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இதயவியல் கண்காட்சியை பார்வையிட்டு திறன் ஆய்வகம், உடலியல் மறுவாழ்வு, புனரமைக்கப்பட்ட கருத்தரங்கக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் தமிழ்நாடு அரசின் கொள்கை மற்றும் திட்டம். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆளுநரின் மூலம் தமிழ்நாடு சட்டத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது அதில்,

1. இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன?

2. இந்த மசோதா ஒன்றிய அரசின் அதிகார வரம்பில் வருகிறதா?

3. தேசிய மருத்துவ ஆணைய சட்டம், ஹோமியோபதி ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா?

4. தரமான கல்வி, வெளிப்படைத் தன்மை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்களை உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா?

5. நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துமா?

6. அரசியல் அமைப்பு சட்டப்படி இந்த சட்டம் செல்லத்தக்கதா?

7. தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளதா?

8. அரசியல் அமைப்பு சட்டம் 14 ஐ இச்சட்டம் மீறுகிறதா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதற்கு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி தமிழ்நாடு அரசின் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு முதல்வர் ஒப்புதல் தந்த பிறகு மத்திய அரசுக்கு நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அனுப்பப்படும் மற்றும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும்” எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts