ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது குறித்து உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை.
குறிப்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தற்போதைய வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், ஆளுநரோடு நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதன்படி செயல்படுவோம் என்று கூறியிருந்தார்.
ஆனால், தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழா, அக்டோபர் 21-ஆம் தேதி ஆளுநர் பங்கேற்ற தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்புவிழாவில் உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக் கழகங்களின் இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கவில்லை.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
ஊடகங்களிடம் தொலைபேசி வாயிலாக அவர் பேசுகையில், “தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதிக்கும் வகையில் பிறமொழி ஆதிக்கத்தை திணிக்கும் முகமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இதை கண்டிக்கும் வகையில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை
தமிழ் உணர்வு புரிந்து, தமிழ்நாட்டு மக்களை மதித்து, அமைச்சரவை முடிவை ஏற்று ஆளுநர் செயல்பட்டால் அதை ஏற்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு வளர்ச்சிக்காக நாங்கள் ஒரு விஷயத்தை செய்தால் அதை ஆளுநர் எதிர்க்கிறார். அதனால் தான் நாங்கள் அவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நிலை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வெயில் சுட்டெரிக்கும் மதுரையை சூழ்ந்த மழை வெள்ளம்!
தவெக மாநாடு… 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்!