சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூன் 22) அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 89 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். எனவே சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்படவில்லை. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவினாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 700-ஆக உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரித்தால் கட்சி பொறுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, அமைச்சர் நேருவின் இந்த அறிவிப்பு திமுக நிர்வாகிகள் மத்தியில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் வார்னிங்!
சென்னை ரிப்பன் மாளிகையில் புதிய மாமன்ற கூடம்: கே.என்.நேரு அறிவிப்பு!