நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கக் கூட்டரங்கில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் (TNUIFSL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கே.என்.நேரு பேசும்போது,
” குடிநீர் விநியோகத்தை கண்காணித்தல்!
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் முழுமையாக அகற்றி, மாலைக்குள் திடக்கழிவுகளை கையாண்டு குப்பைகளே இல்லாத நிலை (Zero waste) உருவாக சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். பொதுமக்களிடமிருந்து புகார்கள் ஏதுமிருப்பின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தீர்வு காண வேண்டும்.
புதிய மற்றும் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து LED தெருவிளக்குகளும் 100% எரிவதை உறுதி செய்து, 10 ஆண்டுகளுக்கு புகாருக்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பராமரித்திட வேண்டும். இந்தப் பணிகளை தானியங்கி கருவி (SCADA) மூலம் கண்காணித்து, பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக 24 மணிநேரத்திற்குள் பழுதுபார்த்து எரிய வைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள் இதற்கு தேவையான அனைத்து விளக்குகளையும், உதிரிப் பாகங்களையும் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடிநீர் விநியோகப் பணிகளையும், பாதாளச் சாக்கடை பணிகளையும், தினசரி கண்காணிப்பதுடன், குடிநீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்தல், மின் மோட்டார்கள், வால்வுகள் மற்றும் மின்மாற்றிகளை அவ்வப்போது ஆய்வு செய்து பராமரித்திட வேண்டும். குடிநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்த நாள் மற்றும் அடுத்து சுத்தம் செய்யப்படவிருக்கும் நாளினை அந்தந்தத் தொட்டிகளில் பார்வைக்கு எழுதி வைத்திட வேண்டும்.
குடிநீர் விநியோகம், தெரு மின்விளக்குகள், பொதுசுகாதாரம் மற்றும் நகராட்சி சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை 24 மணி நேரத்திற்குள் நிவர்த்தி செய்வதை அந்தந்தப் பொறுப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்.
ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்!
மழைக் காலத்திற்கு முன்னர் நீர்நிலைகள், ஏரி, குளம் போன்றவைகளை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைத்து, மழைக்காலத்தினை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வதுடன், விடுபட்டுள்ள பகுதிகளில் மழைநீர்வடிகால்களை கட்டி முடித்திட வேண்டும்.
சிறு பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் பார்வையிட்டு, மழைக்காலத்திற்கு முன்னர் பழுதுகளை சீர்செய்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். திட்டப்பணிகளில் தேர்வு செய்த சாலைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.
பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். பணிகள் முடிவுற்றதும் குழிகளை நிரப்பி மிகுதியான மண்ணை அகற்றி போக்குவரத்திற்கு ஏதுவாக சாலையினை சீர்செய்திட வேண்டும்.
அலுவலர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான, குடிநீர் வழங்குதல், பொதுசுகாதாரம், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாதாளச் சாக்கடைகள் பராமரித்தல் ஆகிய பணிகள் சிறப்பாக நடைபெறுவதை தினசரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவு!
பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தை வளாகங்கள் காலை, மாலை என இருநேரமும் சுத்தம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களிலுள்ள கழிப்பறைகள் அவ்வப்போது துர்நாற்றம் ஏற்படாதவாறு சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும்.
மேலும், திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு நிலம் கையகப்படுத்துவதில், சிரமம் ஏதுமிருந்தால், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்படின் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் Pumping Station-களுக்கு நிலம் தேர்வு செய்வதற்கு முன்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் நிலம் தேர்வு செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான காலியிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் ஒரே மாதிரியான வண்ணத்தில் கம்பிவேலி (Uniform Fencing) மற்றும் பெயர்ப்பலகை அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளின் வருவாயினை பெருக்கும் பொருட்டு, வருவாய் பிரிவு அலுவலர்கள் குழுக்கள் அமைத்து தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டு நடத்தப்படும் அறிவு மையங்கள் (Knowledge Centres) நல்லமுறையில் இயங்குவதை உறுதி செய்து, கொடையாளிகளை கண்டறிந்து அதிக அளவில் புத்தகங்களை கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தக்க நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் தற்போது நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.
எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு,
” 95% மழைநீர் வடிகால் பணி நிறைவு!
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்த திட்டங்களை முழுமையாக விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக முடிக்கப்பட வேண்டிய திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான சிரமங்கள் இருக்கும்பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அறிவித்திருக்கின்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி, நீர்வளத்துறையின் சார்பில் ஏரிகள் மற்றும் குளங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறையின் சார்பில் அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 95% முடிவடைந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணிகள் முடிவுறும். சில இடங்களில் இருந்த சிரமங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை!
கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காவண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து, இந்த மாத இறுதிக்குள் பணியினை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கழிவுநீர் கட்டமைப்புகள், கழிப்பிடங்கள், பழுதடைந்த தெருமின்விளக்குகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் காரணமாகவும், கணேசபுரம் சுரங்கப்பாதையில் இரயில்வே நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் காரணமாகவும் மழைநீர் வெளியேற்றுவதற்கு சிரமங்கள் உள்ளதை சீர்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளது.
9,643 புதிய சாலைப்பணிகள் நிறைவு!
மீதமுள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்காவண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்காவண்ணம் அந்நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வெளியேற்ற சிரமம் ஏற்படும் இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரினை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சராசரியாக பெய்யும் 20 செ.மீ. அளவிலான மழைப்பொழிவினை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத விதமாக 40 செ.மீ. முதல் 50 செ.மீ. வரையிலான கனமழை ஒரேநேரத்தில் அதிகளவில் பெய்யும் பொழுது, தேங்கும் மழைநீர் ஓரிரு நாட்களில் வடிந்து சென்று விடும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரேநேரத்தில் 60 முதல் 70 செ.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டக் காரணத்தினால் மழைநீர்த்தேக்கம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 7 நாட்களுக்குள் மின்விநியோகம் வழங்கப்பட்டது. 128 இடங்களில் உடைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சீர்செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9,643 புதிய சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 595 சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. 528 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் காணப்படும் பள்ளம் மற்றும் மேடுகள் உடனடியாக சரிசெய்யப்படும்” என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷ் படத்துக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு… இதுதான் காரணம்!
ஹேமந்த் சோரன் ஜாமீன்: ED மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!