சென்னையில் வெள்ள நீர் வடிந்ததால், எடப்பாடி பழனிசாமி மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்டோபர் 16) தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு “தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்திருக்கிறது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், பெருமழை வரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்தவுடன், துணை முதல்வர் உதயநிதி மாநகராட்சி அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நேற்று ஒரே நாளில் சென்னையின் பல பகுதிகளில் 17 – 20 வரை செ.மீ பெய்திருக்கிறது. சில இடங்களில் 30 செ.மீ மழை பெய்திருக்கிறது. இருந்தாலும், ஒரு சில இடங்களை தவிர, அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனடியாக வடிந்திருக்கிறது.
கணேசபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒரு சப்வே தவிர மற்ற அனைத்து சப்வேயிலும் போக்குவரத்து இயல்பாக தொடங்கியிருக்கிறது. இன்று காலையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தபோது, வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியை, வேளச்சேரியாக மாற்றிக்கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.
சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 990 மின் மோட்டார்கள், 400 டிராக்டர்கள், 70 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
2011 – 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைநீர் வடிகால் பணி வெறும் 400 கி.மீ மட்டும் தான் கட்டப்பட்டது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின் படி, திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 781 கி.மீ மழைநீர் வடிகால் பணி முடிந்துவிட்டது. மற்ற பகுதிகளிலும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் தண்ணீர் உடனடியாக வடிந்திருக்கிறது.
சென்னையில் வெள்ளை நீர் வடிந்ததால், மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…