அழைப்பு விடுத்த அமைச்சர் நேரு… ரேவந்த் ரெட்டி சொன்ன பதில்!

Published On:

| By Selvam

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசித்து விட்டு பங்கேற்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று (மார்ச் 13) தெரிவித்துள்ளார். nehru invite revanth reddy

சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், மார்ச் 22-ஆம் தேதி தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திரா மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு திமுக அமைச்சர்கள், எம்.பி-க்கள் அடங்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் இன்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின் போது திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, துணை பொதுசெயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா மற்றும் எம்.பி-க்கள் அருண் நேரு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இதை எந்த விதத்திலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தென் மாநில மக்கள் பாஜகவை வளர ஒருபோதும் அனுமதிக்காததால், அந்த பகையை தீர்க்க பழிவாங்கும் அரசியலை செய்கிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் அனுமதி பெற்று கூட்டத்தில் கலந்து கொள்வேன்.

தமிழகத்தைப் போலவே தெலங்கானா அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். இதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். அவரும் இதுதொடர்பாக தனது அமைச்சரவையில் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தென் மாநில முதல்வர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

அந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அழைப்பதற்காக என்னை அனுப்பினார். நான் ரேவந்த் ரெட்டியிடம் கடிதம் கொடுத்து முறைப்படி அழைத்திருக்கிறேன். அவர் தனது கட்சியின் உயர்மட்ட குழுவிடம் ஆலோசித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்” என்று தெரிவித்தார். nehru invite revanth reddy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share