விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 12 ) நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது பலவனத்தம் என்ற கிராமத்தில் மனு அளிக்க வந்த ஒரு பெண்ணை அமைச்சர் தன்னிடம் இருந்த காகிதத்தால் தலையில் தட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு,
“மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் கலா என்ற அந்த பெண்மணி இன்று காலை ( ஜூலை 13 ) செய்தியாளர்களை சந்தித்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நான் வயது முதிர்ந்த என் தாய்க்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க சென்றேன். அமைச்சரை 30 வருடங்களாக எனக்குத் தெரியும். அவர் பலவனத்தம் பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்” என்று சொன்னவரிடம்,
”அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஏன் உங்களை தலையில் அடித்தார்?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ,“அவர் எனக்கு அண்ணன் மாதிரி. செல்லமாகத் தான் தலையில் அடித்தார்” என்றும் கூறியுள்ளார் கலாவதி.
மு.வா.ஜெகதீஸ் குமார்