அமைச்சர் நேரு சொன்னது சரிதான்: ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!

அரசியல்

”பாஜகவினரின் செயல்பாடுகளை திமுகவினர் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்” என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கும் கருத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (அக்டோபர் 31) மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நேரு பேச்சு!

இதில் உரையாற்றிய கே.என்.நேரு, “தமிழக கவர்னர் எதிர்க்கட்சி நபரை போல் செயல்படுகிறார். மற்றொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறிய விஷயத்தையும் ஊதி பெரிதாக்குகிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் இரண்டாக பிளவுபட்டு கிடப்பதை பாஜக பயன்படுத்தி இருவரையும் சேர விடாமல் மிக சாமர்த்தியமாக செயல்படுகிறது. பாஜகவினரின் செயல்பாடுகளை திமுகவினர் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

அமைச்சர் நேருவின் கருத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர், இன்று (நவம்பர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு எதிராக எப்படி யெல்லாம் பாஜக – ஆர்எஸ்எஸ் வியூகம் வகுத்து, அன்றாட அரசியல் செய்கிறது என்பதை மிகச் சரியாக – அக்கட்சியினருக்கு விளக்கியுள்ளதோடு,

அதை எதிர்கொண்டு முறியடிக்க உறுதிபூண்டு உழைக்கவேண்டியது திமுகவின் செயல்வீரர்கள், வீராங்கனைகளின் இன்றியமையாத அன்றாடக் கடமை என்பதை திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.

minister k.n.nehru speech k.veeramani welcomes

இப்பணியில் திமு.க வினை – திமுக அரசினை – அவ்வரசு அமைவதற்கு ஓய்வறியாது உழைத்த திமுக தொண்டர்கள் – தோழர்கள் – பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்து,

அதன் ஒப்பற்ற தலைவர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலினின் கைகளில் வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் – புதுச்சேரியில் முன்பு தந்ததைவிட ஒன்று கூடுதலாகவே 40க்கு 40 தொகுதிகளின் வெற்றிக் கனியைப் பறித்துத் தருவதே ஒரே இலக்கு என்று நாளும் உழைக்கவேண்டிய அவசியத்தை முதன்மைப்படுத்தியுள்ளார் திமுகவின் முதன்மைச் செயலாளர்.

இது திருச்சி மாவட்டங்களுக்கு மட்டும் சொன்னதல்ல; தமிழ்நாட்டு அரசியலின் சரியான உண்மையான ‘ஸ்கேன்’ போன்ற யதார்த்தமானதாகும்!

அதிமுகவைப் பிளப்பதில் பிஜேபியின் திருவிளையாடல்கள்!

எந்தப் பகுதியிலிருந்து வியூகங்கள் எப்படியெல்லாம் பாஜகவினால் வகுக்கப்படுகிறது என்பதை விளக்கிய அவர், ‘அதிமுகவினரை முன்பு பிரித்ததோடு, இப்போது அவர்களை பல பிளவுகளாக்கி, ஒன்று சேரவிடாமல் ‘நான்தான், நீ தான்’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், அவர்கள் இடத்தைப் பிடித்துவிடவேண்டும் – எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது.

அதேநேரத்தில், அதிமுகவை ஒன்று சேரவிடாமல் பார்த்துக் கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்! எனவே, இதைப் புரிந்துகொண்டு திமுக செயல் வீரர்கள், பொறுப்பாளர்கள் உழைக்கவேண்டும்‘ என்று கூறியிருக்கிறார் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. இவை அப்பட்டமான உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கும் கருத்துகள் -வரவேற்கவேண்டியவை.

அனைவருக்கும் நாம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் திமுக; அதை மாற்றினால் அதிமுக என்றுதான் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்; காரணம், இது பெரியார் மண்; சமூகநீதி மண்.

minister k.n.nehru speech k.veeramani welcomes

எதிர்க்கட்சியாகிய அதிமுகவை வெல்வது, திமுகவுக்கு முக்கியம். திமுகவை வெல்வது எங்கள் இலக்கு என்று அதிமுக அரசியல் – தேர்தல் யுத்தம் – போட்டிகள் இருந்தாலும், கொள்கை – லட்சியங்கள் – தோற்றம் இவற்றை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்யும் எவருக்கும் ஒன்று புரியும்.

பெரியார், அண்ணா கொள்கைகளை எந்த அளவுக்கு அதிமுகவினர் புரிந்துகொண்டுள்ளனர் என்பது ஒருபுறம் இருந்தாலும், பிஜேபி என்பது அடிப்படையில் திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிர்ப்பானது என்பதை முக்கியமாகப் புரிந்துகொண்டு, இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும்.

குறைந்தபட்சம் அதிமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சியாக பிஜேபி வர முயற்சிக்கிறது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நுட்பமாகக் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

திமுகவும் – அதிமுகவும் பங்காளி கட்சிகள். கொள்கைரீதியாக சில நேரங்களில், சில பிரச்சினைகளில் சார்ந்துபோகும் வாய்ப்புகள் இருந்தாலும், அரசியல் களத்தில் நேர் எதிரிடை. ஆனால், பாஜக என்பது பகையாளிக் கட்சி – கொள்கை ரீதியாக! – (தனிப்பட்ட முறையில் அல்ல).

பிஜேபியின் திட்டமும் – கனவும்!

அதிமுகவினர், மூன்று, நான்கு குழுக்களாக பிளவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் கட்சியின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்வதோடு, கொள்கை எதிரியிடம் போட்டி போட்டிக் கொண்டு செல்வதனாலும், அக்கட்சிக்கு, அதன் தலைவர்களாகக் கருதி, நீதிமன்றங்கள் மூலம் சண்டையிட்டுக் கொண்டிருப்பதினாலும் எந்த லாபமும் – பயனும் கிடையாது என்பதைப் புரிந்து, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட வேண்டும்.

minister k.n.nehru speech k.veeramani welcomes

தங்களது கொள்கை எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், பெரும் நட்டம் அவர்களுக்குத்தான். ‘திராவிட மாடல்’ என்பதைக்கூட சில அதிமுகவினர் விமர்சனம் செய்வது அவர்களில் சிலருக்குக் கொள்கை அடிப்படையே புரியவில்லை என்பதால்தான்.

எனவேதான், இரு கட்சிகளையும் அழித்துவிட்டு, அந்த இடத்தில் தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் கிளையான பாஜக விரும்புகிறது. இது ‘கடல் வற்றி கருவாடு தின்ன விரும்பி, குடல்வற்றிச் செத்த கொக்கு’ ஆக வேண்டுமானால் இருக்கலாம்;

ஆகவே, உண்மையான எதிரியை அடையாளம் காண வேண்டியது முக்கியம். திமுக எத்தனையோ நெருக்கடி காலங்களை எதிர்கொண்டு நெருப்பில் நீந்தி வந்த இயக்கம்; இன்றைக்கும், கட்டுப்பாடு மிகுந்த எஃகு கோட்டை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கொள்கைகளைக் காப்பாற்றவே கட்சியும், ஆட்சியும் என்பதைத் தொண்டர்கள், தோழர்களுக்குப் புரியவைத்து, ஆரிய மண்ணாக மாற்றிட, இந்தத் திராவிட மண்ணை ஒருபோதும் விடக்கூடாது என்பதே நம் உறுதியாக அமையவேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

நேரு பேச்சு : எடப்பாடி ரியாக்‌ஷன்!

அதிமுகவுக்கும் சேர்த்து நாங்கதான் குரல் கொடுக்கணும்: அன்று வேலு, இன்று நேரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *