ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218-வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 3) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இது குறித்து மக்களிடம் எடுத்து சென்றுள்ளோம்.
ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ் மகன் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட கூடாது
உச்சநீதிமன்றத்தில் பேனா நினைவு சின்னத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யவில்லை. உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்று நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றவரிடம் என்டிஏ கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் இணைந்தால் அதிமுக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதுபோன்ற சூழல் வந்தால் எங்கள் கட்சியினுடைய நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஆகஸ்ட் 5-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
தீரன் சின்னமலை நினைவு நாள்: ராமதாஸ் கோரிக்கை!