அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
அதுபோன்று 2012ல் சொத்து குவிப்பு வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
இன்று பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த நிலையில் இன்று மற்றொரு திமுக அமைச்சரான ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீது சூமோட்டோ வழக்கு பதிவு செய்துள்ளார் நீதிபதி.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐ.பெரியசாமி எம்.பி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன்படி, இவ்வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து நீதிபதி ஜெயவேல் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
வளர்மதி மீதும் சூமோட்டோ
2001-2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இருந்து வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இந்த இரு வழக்குகளும் நாளை செப்டம்பர் 8 விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா