வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 26) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி. அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை ஏற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இந்தவழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஐ.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, “ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்தது சட்டவிரோதம் என்று கருதினால், மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடலாம்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிக்கு வீடு ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுதலை செய்தது சரியானது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. எனவே வழக்கு தொடர ஆளுநர்தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2023 ஜனவரியில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுவிக்ககோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், “அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரித்து, ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் ஐ.பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ.1 லட்சம் பிணை செலுத்த வேண்டும். லஞ்சஒழிப்புத்துறை முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை மீண்டும் விசாரித்து ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…