தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று (ஜூன் 9) செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “தமிழக அரசு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.
கள்ளுக்கடைகளை திறப்பது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழக மின்வாரியத்தின் கடனை குறைக்க மின் லாட்டரி விற்பனையை துவங்க வேண்டும். லாட்டரி வென்றவர்களுக்கு பணப்பரிசுக்கு பதிலாக மானிய விலையில் மின்சாரம் வழங்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் கள்ளுக்கடையை திறப்பது சாத்தியமில்லை. கள்ளுக்கடைகளை திறந்தால் கள்ளச்சாராய விற்பனை அதிகமாகும். இதனால் தான் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டது.
டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது. கள்ளுக்கடையை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்