அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போதைய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில்  வீட்டுமனைகள் அரசால் ஒதுக்கப்பட்டன.

இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை 2013ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. அமைச்சர் ஐ.பெரியசாமி மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில் சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது,.

அப்போது, அமைச்சர் ஐ பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “இந்த வழக்கில் அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும் போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு” என்று வாதிட்டார்.

அதோடு, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், எதிர் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி இந்த மனு தொடர்பாக டிசம்பர் 19ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.

விசாரணையை வரும் டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக 2019ல் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எம்.நிர்மல் குமார் 2022ல் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

மதுரை, திருச்சியில் விரைவில் டைடல் பார்க்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வரமுடியாது : கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel