அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த ஒதுக்கீட்டின் படி முன்னாள் டிஜிபியும், உளவுத் துறை ஐஜியாக இருந்தவருமான ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர்,
ஆகியோருக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் திருவான்மியூரில் வீட்டுமனைகள் 2008ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு இந்த நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி கட்டிடம் கட்டி லாபம் ஈட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் அப்போதைய வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் மனைவி,
வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளராக இருந்த முருகையா உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், “இவ்வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்கள், பிற ஆதாரங்கள்,
சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம் வழக்கைத் தொடர போதிய முகாந்திரம் உள்ளது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று (டிசம்பர் 12) விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐ.பெரியசாமி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
வழக்கை அவர் சந்திக்கவும் உத்தரவிட்டு ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
பிரியா
அமைச்சராகும் உதயநிதி: இலாக்காவை இழக்கப்போகும் அமைச்சர்கள்!
கனமழை : மாணவர்களுக்கு அரைநாள் விடுப்பு!