வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகள் ஒதுக்கப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார் ஐ.பெரியசாமி. இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டுக் காலத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2008 ஆம் ஆண்டு அமைச்சர் ஐ. பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பாதுகாவலராக இருந்த கணேஷ் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் ஐ.பெரியசாமி தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 17) சிறப்பு நீதிபதி ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில், வழக்கறிஞர்கள் ரகுநாதன் மற்றும் ஏ.சரவணன் ஆகியோர் வாதிட்டனர்.
அப்போது, “விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதனால் வீட்டு வசதி துறை வாரியத்திற்கு எந்த ஒரு இழப்பீடும் ஏற்படவில்லை என்றும் சந்தை விலைக்குத் தான் விற்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு சபாநாயகர் முறையாக அனுமதி அளிக்கவில்லை. மேலும் அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து அவரை விடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டி, வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
மோனிஷா
விராட் கோலியின் ’நாட்டு நாட்டு’: இணையத்தில் வைரல்!
மீண்டும் லைலா – சிம்ரன் கூட்டணி: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!