சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (டிசம்பர் 14) தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இந்த வழக்கில் இருந்து கீதாஜீவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் விடுவித்தார்.
தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி 1996-2001 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த கால கட்டத்தில் அவரது மகளும் தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவன் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தார்.
திமுக ஆட்சிக்குப் பிறகான அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை என்.பெரியசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிந்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக என்.பெரியசாமி, அடுத்ததாக அவரது மனைவி எபிநேசர், மூன்றாவது, நான்காவதாக அவரது மகன்கள் ராஜா, ஜெகன் (தற்போது தூத்துக்குடி மாநகர மேயர்), ஐந்தாவதாக கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப், ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் என்.பெரியசாமி கடந்த 2017 மே 26 ஆம் தேதி காலமானார்.
அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில் தீர்ப்புக்காக இந்த வழக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
அப்போது இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தார்.
–வேந்தன்