தமிழக அரசு பணிக்கு இந்தி அவசியமா? – சீமான் எச்சரிக்கை… கீதா ஜீவன் விளக்கம்!!

அரசியல்

பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் மகளிர் உதவி கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பு வெளியாகிருந்தது. இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 4) வெளியிட்டிருந்த அறிக்கையில், “மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும். அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மகளிர் உதவி கட்டுப்பாட்டு மைய விளம்பரத்தில் தவறுதலான அறிவிக்கையை பதிவேற்றிய இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண்.181” சென்னையில் செயல்பட்டு வருகிறது.

மகளிர் உதவி எண்:181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் “அழைப்பு ஏற்பாளர்” (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

 

மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு.

தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் விடுதலை!

குமரி டூ திருப்பூர் வரை… எங்கெங்கு கனமழை?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *