“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

அரசியல்

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதால் தான் முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பில், 7 தளங்களுடன் கலைஞர் பெயரில், சர்வதே தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

நூலகம் கட்ட 99 கோடி ரூபாயும், புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய், தொழில்நுட்ப கருவிகள் வாங்க, 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு இறுதிகட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது,

“தென்னகத்தை அடிப்படையாக வைத்து தான் கலைஞர் நூலகத்தை அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.

கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். கலைஞர் நூலக திறப்பு விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

80 சதவீத முகப்பு மற்றும் தோரண வாயில் பணிகளும், குழந்தைகள் பிரிவில் 75 சதவீத பணிகளும் நிறைவேறியுள்ளது.

தமிழ்ப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.முழுமையாக அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ளது போன்ற பர்னிச்சர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கலைஞர் நூலகத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் நூலகம் திறக்கப்படும்.” என்றவரிடம்,

பொங்கலுக்கு கரும்பு கொடுக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

“பொங்கலுக்கு கரும்பு கொடுத்தால் அரைக்கரும்பு, முழுக்கரும்பு, கால் கரும்பு கொடுப்பதாக புகார் சொல்கிறார்கள். வெல்லம், முந்திரி கொடுத்தாலும் சின்ன முந்திரி, உடைந்துள்ளது, வெல்லம் ஒழுகுகிறது, ஏலக்காய் சிறியதாக உள்ளது என புகார் சொல்கிறார்கள். அதனால் தான் முதல்வர் பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கி கொள்ள ரூ.1000 கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் காலாவதியான 58 டோல்கேட் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

ஜனவரி 3,4ம் தேதி டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இந்தப்பிரச்சனைகள் குறித்து அவரிடம் எடுத்து கூற உள்ளேன்.

பல சுங்கச்சாவடிகள் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை மெற்கொண்டு வருவதால் 40 சதவிகித கட்டணம் பெற்றுக்கொள்ள கூறியுள்ளோம்.

கப்பலூர், கிருஷ்ணகிரி டோல்கேட் குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழகத்தில் சாலைப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்.

சாலை பாதுகாப்புக்கு மத்திய அரசு குறிப்பிட்ட பிளாக் ஸ்பாட் எனப்படும் 1,337 இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சாலைப்பாதுகாப்பில் தமிழகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பாராட்டியுள்ளார்.” என்று தெரிவித்தார்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா : காஜு பட்டர் மசாலா

சுவாசம் விடுதலைக்கான பாதை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *