திமுக அரசு அமைந்தவுடன் பல்வேறு நகரப்பகுதிகளிலும் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம், வேளாண்துறை, பால்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.
கேள்வி நேரத்தின் போது உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், “உசிலம்பட்டி நகராட்சிப் பகுதி இருவழிச் சாலையாக இருக்கிறது. உசிலம்பட்டியில் அந்த இருவழிச்சாலை பகுதியில் ஏறக்குறைய 20 முதல் 25 திருமண மண்டபங்கள் மெயின் ரோட்டிலேயே இருக்கின்றன.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவேண்டும் என்பதற்காக, புறவழிச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே, நகரப் பகுதிகளில் நெரிசல் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால், புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று, அதற்காக பல நகரங்களில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு, சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்வியை எடுத்துக் கொண்டு, அங்கு புறவழிச் சாலை அமைப்பதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா என்று முடிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அந்தப் பணிகளை எடுத்துக் கொள்வதற்கு அரசு முயற்சி செய்யும்” என்றார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், “காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய கீழம்பி செவிலிமேடு என்ற புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைத்துத் தரவேண்டும் என்பதை அமைச்சர் நன்கு உணர்ந்திருப்பார். எனவே, அதை அமைக்க முன்வருவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, “முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்கிற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த 3 ஆண்டு காலமாக இரண்டுவழிச் சாலைகளையெல்லாம் நான்கு வழிச் சாலைகளாக அரசு அமைத்துக் கொண்டிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் சொல்கிற புறவழிச் சாலை என்பது ஓர் அத்தியாவசியமான சாலை தான். ஏனென்றால், நகரத்தைப் பொறுத்தளவிற்கு, காஞ்சிபுரத்திலே நெரிசல் அதிகம்.
ஆகவே, புறவழிச்சாலை மூலமாகத்தான் செய்யாறுக்கே, நான் என்னுடைய மாவட்டத்திற்கே போக முடியும். அந்தச் சாலையைத் தான் அவர் குறிப்பிடுகிறார்.
எனவே, அந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீடுகள் எல்லாம் தயார் செய்துகொண்டிருக்கிறோம். இந்த ஆண்டே அந்தச் சாலைப் பணியை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!
‘அடுத்தடுத்து தேர்வுகள் ரத்து… மாணவர்கள் விரக்தி’ : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!