துறைமுகங்கள் விரிவாக்கம்… மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் : எ.வ.வேலு

Published On:

| By Kavi

Minister EV Velu Request to Union Govt

தமிழ்நாடுதான் அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு  அதிகப்படியான நிதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனவாலிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.

சென்னை, கிண்டி, ஐ.டி.சி. ஹோட்டலில், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் தலைமையில் , “குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலைக்கண்காட்சி” நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்..

இந்நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வேலு, “ கடல் கடந்து வாணிபம் செய்ததில் பல்லவ, சேர, சோழ, பாண்டிய தமிழ் மன்னர்கள் தலைசிறந்து விளங்கினர்.

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி கடலில் போட்டால், அது தனுஷ்கோடிக்கு வரும் என்பது தமிழன் கண்டறிந்த நீரோட்ட தொழில்நுட்பம்.

தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் கப்பல் போக்குவரத்தை துவங்கினான். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் தீவுகளையும், போக முடியாத இடங்களையும், துறைமுகங்களையும் கண்டறிந்தான்.

கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழக கல்வெட்டில் “கடலன் வழுதி நெடுஞ்செழியன்” என்ற பெயர் இடம் பெற்றுள்ளது, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு மேற்குக் கடற்கரையில் இருந்த முசிறி துறைமுகம் வழியாக தமிழ் வணிகர்கள் சென்றுள்ளனர்.

அதேபோன்று அந்நாடுகளிலிருந்து பல அயலக வணிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்” என தெரிவித்தார்.

Minister EV Velu Request to Union Govt

மன்னர்களின் கடல்சார் சாதனைகள்

தொடர்ந்து பேசிய அவர்,  “பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில், இந்தியாவில் முதன் முதலாக மாமல்லபுரத்தில் கலங்கரைவிளக்கு அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற புறனாற்றுப் பாடலில் சேரர்கள் முசிறியை தலைநகரமாக கொண்டு கடல் வாணிபம் செய்தனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழ வம்சத்தினர் உலகத்திலேயே தமிழகத்தை ஒரு இணையற்ற தலைசிறந்த கடல் சக்தியாக உயர்த்தினர்.

ராஜேந்திர சோழனின் ஆட்சி மாபெரும் வெற்றிகள் மற்றும் கடல்சார் சாதனைகள் நிறைந்த சகாப்தமாகும். சோழப் பேரரசின் கடற்படைகள் தொலைதூரக் கரைகளுக்குச் சென்று இலங்கை, கடலோர பர்மா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் வரை எல்லையை மேலும் விரிவுபடுத்தியது.  இந்திய துணைக் கண்டத்தின், கடல் வரலாற்றில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றன.

ராஜேந்திர சோழனின் வலிமையான கப்பல்கள் கடல் வழியாகச் சென்று, இறுதியில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சுமத்ரா, ஜாவா மற்றும் மலேசியாவின் தொலைதூரப் பகுதிகளின் அதிகாரத்தை கைப்பற்றியதோடு, இந்தியப் பெருங்கடல் வர்த்தக பாதையின் மீது தனது முழு அதிகாரத்தையும் செலுத்தியது.  இந்த வெற்றி சோழப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், தொலைதூர நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றங்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை வளர்த்தது.

இந்தியாவிலேயே, சந்தையை தேடி கடல் கடந்து வாணிகம் செய்வதில் தமிழர்கள்தான் முன்னோடிகளாக இருந்தனர். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களின் வளைந்த கடலோரத்தைக் கொண்ட தமிழ் நிலத்தின் இருப்பிடம், கடல் வணிகத்திற்கு மிக சாதகமானதாக இருந்து வந்திருக்கிறது என்றும், தமிழர்கள் கிழக்கில், சீனக் கடற்கரையிலிருந்து, மேற்கில் ரோம் வரை, கடலில் வெகுதூரம் பயணித்தனர்.

ரோம், கிரீஸ் மற்றும் அரபு நாடுகளில் இருந்து, மக்கள் தென்னிந்தியாவிற்கு வர்த்தக நோக்கங்களுக்காக வந்தனர் என்றும், இந்த உண்மைகள் அனைத்தும், பண்டைய தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டு பயணிகள் விட்டுச்சென்ற குறிப்புகளிலிருந்தும் மற்றும் ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழிகளில் காணப்படும் தமிழ் வார்த்தைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

மேலும் அவர்,   “தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த, வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற பொருட்களும் முற்காலத் தமிழர்களின் கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகின்றன. 12 ஆம் நுாற்றாண்டில், தமிழ் புலவர் அவ்வையாரின் “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்ற பாடல், முற்காலத் தமிழர்கள் பெரும் கடலோடிகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Minister EV Velu Request to Union Govt

சங்க இலக்கியங்கள் முற்காலத் தமிழர்களின் கடல் – வணிகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன. “பட்டினப்பாலை” பண்டைய சோழர் காலத் துறைமுகமான காவிரிப்பட்டினத்தைப் பற்றிய சிறந்த வரை படத்தைத் தருகிறது. துறைமுகம், நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள், கிடங்குகள் மற்றும் சரக்குகளின் குவியல்கள் அனைத்தும் இச்செய்யுள்களில் வரைபடமாக விவரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

துறைமுகங்களை மேம்படுத்துதல்

தொடர்ந்து பேசிய அவர்,  “அக்காலத்தில், கொங்கு நாட்டிலிருந்து தங்கம், பாண்டிய நாட்டிலிருந்து முத்துக்கள், சேர நாட்டின் சந்தனம் மற்றும் குடகு மலையிலிருந்து மிளகு ஆகியவை மிகவும் முக்கியமான ஏற்றுமதி பொருட்கள் ஆகும்.

1906 ஆம் ஆண்டில், வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியது குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே மூன்று பெரிய துறைமுகங்ளைக் கொண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. முதலமைச்சர் , வெளிநாடுகளுக்குச் சென்று, தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

எனவே, இங்கே உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த துறைமுகங்களை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு கடல்சார் வாரியமும் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த, ஒன்றிய அரசு தாராளமான நிதி உதவி வழங்க வேண்டும்” என ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் பன்னிரெண்டு பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும், மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குகிறது. இது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம், தமிழ்நாடு மாநிலம் மற்றும் பரந்த தென் பிராந்தியத்திற்கு ஒரு முழுமையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதால், இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, தொழில்மயமாக்கலுக்கு கணிசமான ஆதரவை வழங்குவதுடன், தமிழகத்தில் எண்ணற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான உற்பத்தி அலகுகளை ஈர்க்கவும், அதன் மூலம் நாடு முழுவதும் வேலை வாய்ப்பை உருவாக்கவும் இயலும்.

Minister EV Velu Request to Union Govt

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி

இந்தியாவிலேயே உற்பத்தித் துறையில் இரண்டாவது அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை “தமிழ்நாடு“ பெற்றுள்ளது. வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டம், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் நீண்டகால கனவை (கோரிக்கையை) நிறைவேற்றுவதுடன், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் கணிசமான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணியை குறைக்கும் என்பதில் ஐயமில்லை” என்றும் தெரிவித்தார்.

வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு,  ஜி.எஸ்.டி. அதிகமாக செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு, அதனால், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு அதிகப்படியான நிதி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

பிரியா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel