“யார் அதிக பணிகளை செய்தது” : கோவை ஆத்துபாலம் குறித்த வேலுமணியின் கருத்துக்கு எ.வ.வேலு பதிலடி!

அரசியல்

கோவை ஆத்துபாலம் குறித்த எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை ஆத்துபாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த பாலத்தை முன்னாள் அமைச்சர் வேலுமணி  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவைக்கு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தைதான் இந்த அரசு திறந்து வைக்கிறது. கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று இந்த பாலத்தை கட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி இந்த பாலத்தை கட்ட எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருந்தார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வேலுமணிக்கு இன்று (ஆகஸ்ட் 12) பதிலளித்துள்ள பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் கடித எண்.23504/திட்டம்-1, 2010 ஆம் ஆண்டு கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது.

பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு(CPU) இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கலைஞரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

14.11.2011 மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த வேலுமணி, 7 ஆண்டுகாலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

10 ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2018-2019 ஆம் நிதியாண்டில், 24.1.2021 அன்று, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து, மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12% சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. அப்போது முதலமைச்சர் இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்.

அதன்படி, பலமுறை கோயம்புத்தூர் தளத்திற்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எந்தெந்த வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன்.

என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88% பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.

சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் படத்துடன் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி , உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை, பேட்டியாக அளித்துள்ளார்.

தினமலர் தமிழ்ப் பத்திரிகை “நீட்டித்தது இ.பி.எஸ்.” “நிறைவேற்றியது மு.க.ஸ்டாலின்” எனப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

“காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற முது மொழிக்கேற்ப, திமுக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

NIRF தரவரிசை 2024 : தேசிய அளவில் IIT மெட்ராஸ், அண்ணா பல்கலை. முதலிடம் : முழு பட்டியல் இதோ!

வயநாடு நிலச்சரிவு: லோன் வாங்கியவர்கள் தவிப்பு… வங்கி செய்த அற்புத காரியம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *