என்னிடம் இருந்து ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை: ரெய்டுக்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

அரசியல்

என் வீட்டிலோ, என் பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை கைப்பற்றவில்லை என்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நவம்பர் 3-ஆம் தேதி காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். ஐந்து நாட்கள் ரெய்டு நடந்து நேற்று (நவம்பர் 7) இரவு  முடிந்தது.

இதன் பிறகு திருவண்ணாமலையில்  அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களை சந்தித்தார்.

”என்னுடைய உதவியாளர் கண்ணீர் விட்டு அழுகிற அளவிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அச்சுறுத்தி ஐந்து நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

ஓட்டுநரை தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். எனது மனைவி, மகன்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவிற்கு விசாரணை நடத்தியுள்ளார்கள். நான் தங்கியிருந்த கல்லூரி விடுதியில் சல்லடை போட்டு ஆய்வு செய்தார்கள்.

என்னை தொடர்புபடுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் ஐந்து நாட்களாக சோதனை நடத்தியுள்ளார்கள்.

ஐடி அதிகாரிகள் மீது எனக்கு கோபமில்லை. அவர்கள் அம்பு தான். அம்பு எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். 2 நாட்கள் என்னுடைய தேர்தல் பணிகளை முடக்கினார்கள். அதன் விளைவாக 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் திருவண்ணாமலை மக்கள் என்னை ஜெயிக்க வைத்தார்கள். தற்போது கல்லூரியில் வேலை பார்க்கும் அனைவரையும் தனித்தனியாக அழைத்து ரெய்டு நடத்தியுள்ளார்கள். ரெய்டு தொடர்பான பல்வேறு கற்பனை கதைகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்” என்று பேசியவர் தொடர்ந்தார்.

”நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். திருவண்ணாமலையில் ஜீவா ஜெகன் என்ற அச்சகத்தை நடத்தினேன். லாரி ஓனராக இருந்தேன். பின்னர் சென்னையில் படத்தொழிலில் ஈடுபட்டு தயாரிப்பாளராக இருந்தேன். இந்த தொழில்களில் நான் ஈட்டிய வருமானத்தை கொண்டு 1991-ஆம் ஆண்டு சரவஸ்வதி அம்மாள் அறக்கட்டளையை தொடங்கினேன்.

அதன் மூலமாக பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கினோம். நான் கல்லூரி ஆரம்பிக்கவில்லை என்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில்  கிராமத்து பிள்ளைகள் எத்தனை பேர் சென்னைக்கு சென்று படித்திருக்க முடியும்?

பொது வாழ்க்கையில் 6 முறை மக்கள் பிரதிநிதியாக தொண்டு செய்துள்ளேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்க்கட்சிக்கார்கள் கூட நான் யாரிடமாவது  கையூட்டு பெற்றேன் என்று குற்றம் சொன்னால் அதற்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

மேலும் அவர்,  “2006-ஆம் ஆண்டு கலைஞர் என்னை உணவுத்துறை அமைச்சர் ஆக்கினார். அப்போது சரவஸ்வதி அம்மாள் அறக்கட்டளை நிர்வாகத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.  இதோ என்னுடைய முதல் மகன் குமரன் (அருகே அமர வைத்திருந்தார்) அறக்கட்டளையின் தலைவராக இருந்து பணியாற்றுகிறார். எனக்கும் அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனக்கு இருக்கும் நேரடியான சொத்து என்பது 48.33 ஏக்கர் தான். காந்திநகரில் எனக்கு சொந்தமான இடத்தை மருத்துவமனை கட்ட 33 ஆண்டுகள் ஒத்திக்கு விட்டுள்ளேன். சென்னையில் எனக்கு ஒரு வீடு உள்ளது. இது தான் என்னுடைய சொத்து. தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது இதை தான் குறிப்பிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலின் என்னிடம் நெடுஞ்சாலை துறையை ஒப்படைத்த பிறகு ஒரு சென்ட் நிலம் கூட நான் சொத்து சேர்க்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய எ.வ.வேலு,  “வருமான வரித்துறையில் முறையாக வரி செலுத்துகிறேன். வருமான வரித்துறையை நான் ஏமாற்றுபவன் அல்ல. 2006-11 காலகட்டத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டேன்.  தமிழ்நாடு அரசின் உணவுத்துறையை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகளே பாராட்டினார்கள். அதன் பின் அதிமுக ஆட்சி வந்தது. 2011 இல் என் மீது வழக்கு போடப்படவில்லை, 2012 இல் வழக்கு போடப்படவில்லை.

2013-ஆம் ஆண்டு காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தேன் என்ற ஒரே காரணத்திற்கான என் மீது 11 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார். உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். அரசியல் உள்நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு என்று உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்தது” என்றார் வேலு.

தனக்கு  தொடர்பானவர்கள் இடங்களில் ரெய்டா என்ற விவகாரம் பற்றி பேசிய அமைச்சர் வேலு,  “ அமைச்சர் என்கிற முறையில் பொதுமக்கள் என்னிடம் மனு கொடுக்கிறார்கள். திமுக தொண்டர்கள் என்னிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அப்படி என்னுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் ஐடி ரெய்டு நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?

பாஜகவில் தொழில் அதிபர்களே இல்லையா? அவர்கள் வீட்டிற்கெல்லாம் ஐடி ரெய்டு போவதில்லை. திமுகவை சேர்ந்தவர்கள் வீட்டில் மட்டும் தான் ஐடி ரெய்டு நடத்துகிறார்கள். திமுகவை பொறுத்தவரை எங்கள் தலைவரோ தொண்டர்களோ இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல. சட்டப்படி நாங்கள் நடந்துகொள்கிறோம்.

ஐடி ரெய்டின் காரணமாக ஐந்து நாட்களாக என்னுடைய கழக பணிகள், அரசு பணிகள் நடைபெறவில்லை. அதனை தான் உங்களால் முடக்க முடிந்தது. இன்னும் வேகமாக அரசாங்கத்திற்காகவும் கட்சிக்காகவும் உழைக்க நான் தயாராக உள்ளேன்.

ஐடி, இடி பாஜகவின் அணிகளாக மாறிவிட்டது என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது தான் உண்மை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இப்படி தான் ஐடி ரெய்டு நடந்ததா? வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினார்களா?

நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களை அச்சுறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?  தமிழக முதல்வர் மிசாவையை பார்த்தவர். எங்களுடைய ஒரே இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான்” என்று  பேசினார் அமைச்சர் வேலு.

காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட், மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எ.வ.வேலு,  “காசாகிராண்ட் என்பது யார் என்றே எனக்கு தெரியாது. தேர்தல் நேரங்களில் நான் கோயம்புத்தூருக்கு சுற்றுப்பயணம் செல்கிறபோது அப்பாசாமி கட்டியுள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். 100 சதவிகிதம் அந்த இரண்டு கம்பெனிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை. அபிராமி ராமநாதன் என்பவரிடம் நான் பழகியது கிடையாது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். சிறு வயதில் கோயம்புத்தூருக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரை எனக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தான் அறிமுகம் செய்து வைத்தார். கோயம்புத்தூருக்கு நான் பணி நிமித்தமாகச் செல்லும் போது ஒரே ஊர்க்காரர் என்பதற்காக என்னிடம் அவர் பேசுவது தவறா?

அவருடைய மனைவி மாவட்ட செயலாளர் பரிந்துரையின் பேரில் கட்சியில் பதவி வாங்கியிருக்கலாம். ஆனால் அந்த குடும்பத்தையும் என்னையும் தொடர்புப்படுத்திப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? யாராவது அதனை நிரூபிக்க முடியுமா?

என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக மனசாட்சிக்கு பயந்தவனாக என் தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் இருப்பேன். என் வீட்டிலோ, என் பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. என் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியானது முழுக்க முழுக்க தவறான செய்தி. எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி பணம் கைப்பற்றினால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்று   விரிவாகப் பேசினார் அமைச்சர் எ.வ. வேலு.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீபாவளிக்கு 2.64 லட்சம் மெ.டன் ரேஷன் பொருட்கள் விநிநோகம்!

சத்தீஸ்கர், மிசோரம் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *