உதயநிதி ஸ்டாலின் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்து விட்டார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (டிசம்பர் 12) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முந்தைய அதிமுக அரசு ரூ.6.25 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த கடனிற்கு ஆண்டிற்கு வட்டி மட்டும் 48 ஆயிரம் கோடி கட்ட வேண்டியுள்ளது.
நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். திமுக தேர்தல் வாக்குறுதியில் 75 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
உதயநிதி ஸ்டாலினின் சேவை கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
முதலமைச்சர் செல்ல முடியாத இடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் சென்று பிரச்சாரம் செய்தார். திரைப்படத்தில் நடித்ததால் அவர் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்து விட்டார். அவர் தனது கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் போது, மக்கள் அதற்கு செவிமடுக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
செல்வம்