என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன், என் சமாதியில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுதினால் போதும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேற்று (மார்ச் 28 ) நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலளித்து பேசினர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 29 ) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “எப்பொதெல்லாம் அமைச்சராக உள்ளேனோ அப்போதெல்லாம் இந்த துறைசார்பில் நான் தான் பதில் சொல்லி வருகிறேன்.
நீர்வளத்துறைதான் எனக்கு வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டேன். ஆனால் பொதுப்பணித்துறை என்ற பெயர் இருக்காது என்று முதல்வர் சொன்னார். அதை பற்றி எனக்கு கவலையில்லை; ஆனால் இந்த துறையில்தான் விவசாயிக்கு ஏதாவது செய்ய முடியும் என்று கருதுகிறவன்.
என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் கட்சியில் இருந்தவன், இன்னும் இருக்கபோகிறவன், என்றைக்காவது ஒருநாள் மறையப்போகிறவன்.
நான் மறைந்துவிட்ட அன்று எனக்காக எழுப்பப்படும் சமாதியில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதினால் போதும்.
என் தலைவர் கலைஞருக்கு கோபாலபுரத்து விசுவாசியாகவே வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என கலங்கிய படி பேசினார்.
இடையே குறுக்கிட்ட சபாநாயகர் ’இன்னும் நூறாண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “நிச்சயமாக, சண்டை போட்ட பிறகு கவர்னர் டீக்கு அழைத்திருந்தார்.
நானும் தலைவரும் (மு.க.ஸ்டாலின்) சென்றோம். அப்போது என் வயதைப் பற்றி கேட்டார். அதற்கு முதல்வர், ‘எங்க அப்பாவுடன் 53 வருடங்களுக்கு மேலாக இருந்தவர். இப்போ என்னுடன் இருக்கிறார்’ என்றார்.
அந்தப் பக்கத்தில் உதயா இருந்தார். “அவருடனும் இருக்கிறார்” என்றார் கவர்னர். உடனே நான், உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறான் அவனுடனும் நான்தான் இருப்பேன் என்றேன்.
அப்போது உங்க வயசு என்ன என்றார் கவர்னர். நான் 80களில் இருக்கிறேன். ஆனால், நிச்சயம் 100-ஐ கடப்பேன் என்றேன்.
இதனையும் சொல்லிக் கொடுத்தது எங்கள் தலைவர் கலைஞர் தான். “என்னைக்குமே தனக்கு வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கவே கூடாது. எப்பவும் இளமைன்னே நினைக்கணும்” அப்படின்னு சொல்வாரு கலைஞர்.
அதனால் 100 வயது வரை நிச்சயம் இருப்பேன் கவலைப்படாதீர்கள்” என்று பேசினார் அமைச்சர் துரைமுருகன்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்?: என்.பி.சி.ஐ மறுப்பு
ஊழியரின் வினோத விடுப்பு கடிதம்: இணையத்தில் வைரல்!