காவிரி நீர்… “உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிப்பதில்லை” – துரைமுருகன் காட்டம்!
காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகா அரசு மதிப்பதில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 15) குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டிருந்தது.
இந்தநிலையில், பெங்களூருவில் நேற்று (ஜூலை 14) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட திறந்து விட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் நிலையை கர்நாடகா அரசிடம் முழுமையாக விளக்கி இந்த விஷயத்தில் கனிவுடன் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இருப்பினும் ஒரு டிஎம்சி தண்ணீர் தர முடியாது, 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடுவோம் என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு டிஎம்சி என்பது 11,574 கன அடி. கபினி அணையில் இன்றைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 65 கன அடி கொள்ளளவு உள்ள கபினி அணையில் 64 கன அடி தண்ணீர் இருக்கிறது.124 கன அடி கொள்ளளவு கொண்ட கேஆர்எஸ் அணையில் தற்போது 105 கன அடி தண்ணீர் இருக்கிறது.
இந்த அணைகளில் இருந்து தான் நமக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 4,042 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட்டிருக்கிறார்கள்.
இப்போது கர்நாடகாவில் மிக வேகமாக தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேலும், எவ்வளவு கன அடி தண்ணீர் திறந்துவிடுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு முதல்வரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் செயல்படுகிறார்கள்.
அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது தொடர்பாக முதல்வர் தான் முடிவெடுப்பார். கூட்டணி என்பது வேறு. தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறு தான். கர்நாடகாவின் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழில் கதாநாயகனாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவராஜ்குமார்
சட்டென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?