திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி இரவு திடீரென துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தபோது அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பயணம் மேற்கொண்டார். அது திமுக வட்டாரத்தில் பேசுபொருளானது. அதேபோல இப்போது துரைமுருகனின் திடீர் துபாய் பயணமும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து துரைமுருகன் வட்டாரத்தில் விசாரித்த போது, “தாம்பரம் மாநகராட்சி துணை மேயரும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் அக்கா மகனுமான காமராஜ் இல்ல திருமண விழாவை ஒட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்து துபாயில் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு அமைச்சர் துரைமுருகனுக்கும் அழைப்பிதழ் வைத்திருந்தார்கள்.
இந்நிலையில், அந்த விருந்திற்கு எம்பி ஜெகத்ரட்சகன், தான் செல்லவிருக்கும் திட்டத்தை நேற்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார். மேலும், ‘ரிலாக்ஸா ஒரு பயணம் போயிட்டு வரலாம். வாங்கண்ணே’ என்று துரைமுருகனையும் அழைத்துள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினிடம் தகவல் தெரிவித்து ஒப்புதல் பெற்றுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
நேற்று மாலை கல்குவாரி உரிமையாளர் சங்கத்தினரின் விழாவுக்கு துறை அமைச்சர் என்ற வகையில் துரைமுருகனை அழைத்திருந்தனர். ஆனால், நேற்று பகலில் திடீர் பயணத்தைத் திட்டமிட்ட அமைச்சர் துரைமுருகன், அவர்களிடமும் சொல்லிவிட்டுத்தான் துபாய் புறப்பட்டுள்ளார்.
துரைமுருகனும் அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் உள்ளிட்ட குடும்பத்தினரும் துபாய் சென்றிருக்கிறார்கள். நாளை சென்னை திரும்பி விடுவார்கள்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி கிஃப்ட் ரெடி… அப்டேட் குமாரு
“அப்பா… நான் தனியா இல்லை, நீங்க எப்பவும் என் கூட இருக்கீங்க”- கனிமொழியின் இன்ஸ்டா… காரணம் என்ன?