கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சித்தார் அமைச்சர் துரைமுருகன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 2) நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவின் இலச்சினையை வெளியிட்டார். மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,
“ மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருந்தபோது, எந்த மசோதாவிலும் கையெழுத்து போடாமல் அல்லது தன்னிடம் வைத்திருக்காமல், மசோதா வந்த உடனே கையெழுத்து போட்டு, உடனே அரசுக்கு அனுப்பி, அரசுக்கு எந்த தலைவலியும் ஏற்படுத்தாமல் இருந்த சிறப்பு விருந்தினர் கோபால கிருஷ்ண காந்தி அவர்களே” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக சாடினார் துரைமுருகன். இதனைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டினர்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், “எந்த காலத்திலும் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை செய்தவர் கலைஞர். அவருக்கு தான் நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறோம்.
எத்தனையோ செத்துபோன மொழிகள் இன்று சீர் செய்யப்படுகிறது. ஆனால் பன்னெடுங்காலமாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று எத்தனையோ பேர் கேட்டனர்.
காலம் கடந்ததே தவிர யாரும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு எத்தனையோ தடங்கல்களை தாண்டி செம்மொழி அந்தஸ்து வாங்கி தந்தவர் கலைஞர்.
கலைஞர் – கிங் மேக்கர்
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்று அறிவித்தவர் கலைஞர். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல. அகில இந்திய அளவிலும் தலைவராக இருந்தார். அவர் கிங் மேக்கராக இருந்து வாஜ்பாய், சரண் சிங், விபி சிங் ஆகியோரை பிரதமராக்கினார்.
சஞ்சீவ் ரெட்டி போன்றோரை கோபாலபுரத்தில் இருந்தபடியே குடியரசு தலைவராக்கினார். அவரிடம் ஒருமுறை நீங்கள் பிரதமர் ஆகலாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘என் உயரம் எனக்கு தெரியும், என் நாட்டு மக்கள் தான் எனக்கு முக்கியம்’ என்று தெரிவித்தவர் கலைஞர்.
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடாப்படுவது நமக்கெல்லாம் பெருமை. அவரது நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் ஸ்டாலினை மக்கள் முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளார்கள்.
வேறு யாரும் இருந்திருந்தால் ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் காலத்திற்கு யாரை எப்போது ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிந்திருக்கிறது” என்று உரையாற்றினார் துரைமுருகன்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டை விட்டுப்போகும் நிறுவனங்கள்: எடப்பாடி அடுக்கும் கேள்விகள்!
இளையராஜா பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்