சுட்டெரிக்கும் வெயில்…அமைச்சரின் இடைவிடாத பிரச்சாரம்

அரசியல்

கடலூர் தொகுதியில் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிமுக, பாஜக கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் எம்.கே.விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

கடலூர் மக்களவை தொகுதியில் திட்டக்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியின் திமுக மாவட்டச் செயலாளர்  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

மற்ற பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருதாச்சலம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் கடலூர் மேற்கு மாவட்டத்தில் அடங்கியது. இப்பகுதியின் திமுக மாவட்டச் செயலாளர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன்.

கடலூர் கூட்டணிக் கட்சி வேட்பாளரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க, கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், மேற்கு மாவட்டச் செயலாளர் சி.வெ.கணேசனும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இதில் குறிப்பாக அமைச்சர் சி.வெ.கணேசன் முதல்கட்டமாக நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் முக்கிய சமூகங்களின் பிரமுகர்களை சந்தித்து உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறேன்.

ஊருக்குத் தேவையானதும் செய்து கொடுக்கிறேன், உங்கள் வாக்குகளை சிதறாமல் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு போடச் சொல்லுங்கள் என்று ரகசியப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களை தனது ஓபன் பிரச்சார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓயாமல் ஊர் ஊராக, வீதி வீதியாக சுட்டெரிக்கும் வெயிலில் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கூட்டணிக் கட்சியினரும், நிர்வாகிகளும் சோர்வடைந்தாலும் கூட அமைச்சர் விடாமல் இழுத்துச் செல்கிறார் என்கிறார்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்.

போகும் போது ஒவ்வொரு ஊரிலும்,  உங்கள் கிராமத்திற்கு குடிநீர் தேக்கத் தொட்டி கட்டிக் கொடுத்திருக்கிறேன், சாலைகள் போட்டுக் கொடுத்திருக்கிறேன், பள்ளிக் கட்டிடம் மற்றும் சமூக நலக் கூடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறேன் என்று பட்டியலிட்டு உரிமையுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மங்களூர் ஒன்றியம் மலையனூர் ஊராட்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், மலையனூர் ஊராட்சி உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது வள்ளிமதுரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தபோது, அங்கு கூடியிருந்த பெண்கள், ”எங்க ஊருக்கு வந்து சென்ற பேருந்து தற்போது நின்றுவிட்டது.

இப்போது ஓட்டு கேட்க வந்துவிட்டீர்களா” என்று கோபமாகக் கேட்டபோது, ”அம்மா கொஞ்சம் கோபப்படாம சிரித்த முகத்தோடு பேசுங்க. இப்போது தேர்தல் நேரம். இருந்தாலும் உங்கள் ஊருக்கு பெண்கள் இலவசமாக சென்றுவரக் கூடிய அரசு பேருந்தை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து அம்பிகா என்ற பெண்மணி, பக்கத்து ஊர்ல தையல் மிஷின் கொடுத்திருக்கீங்க. எங்க வீட்டுக்கு கொடுக்கவில்லையே என்று கேட்டார்.

அதற்கு, ”எனது சொந்த செலவில் இந்த ஒன்றியத்தில் இரண்டாயிரம் தையல் மிஷின் கொடுத்திருக்கிறேன். இன்னமும் கொடுக்கப் போகிறேன். அதில் தேவை உள்ளவர்களைக் கேட்டறிந்து நிச்சயமாகக் கொடுக்கிறேன்” என்றார்.

மேலும் அங்கிருந்தவர்களிடம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு நலத்திட்டங்களை அனுபவித்து வருகிறீர்கள்.

அரசுப் பேருந்து, உரிமைத் தொகை 1000, மாணவிகளுக்கான ஊக்கத் தொகை 1000, காலை உணவுத் திட்டத்தில் எவ்வளவோ சிறுவர், சிறுமியர் பயனடைகிறார்கள்.

ஆதலால் நீங்கள் அனைவரும் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நான் உங்கள் மாவட்டத்துக்காரன்.

நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வீடு தேடி வந்து உரிமையோடு கேட்கலாம் என்று வாக்கு சேகரித்து வரும் அமைச்சர் கணேசன், திமுக கூட்டணிக் கட்சிகளின் கிளை முதல் மாவட்டம் வரையில் உள்ள நிர்வாகிகளை திருப்திபடுத்தும் வகையில் அன்றாடம் கவனிக்க வேண்டியதையும், நிறைவாக கவனித்து வருகிறார் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணியாக இல்லை… அன்னையாக வருகிறேன் : பிரமேலதா உருக்கம்!

”அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்” : செல்லூர் ராஜூ விமர்சனம்!

எடப்பாடியின் பாதகச் செயல்கள் : பட்டியலிட்டு திமுக அட்டாக்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *