மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 , ஆகஸ்ட் 24ம் தேதி , சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் “ மறைந்த முதல்வர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.
இந்நிலையில்,மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்தச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
கடலுக்குள் பேனா வைப்பதெல்லாம் தேவையில்லாத சேட்டை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் “பேனா சிலையெல்லாம் நிறுவ முடியாது. நான் நிறுவவிட மாட்டேன். இப்போது பேனா வைப்பீர்கள் பிறகு கண்ணாடி வைப்பீர்கள்.நாளை உதயநிதி முதலமைச்சரானால் எனது தந்தையின் விக் என்று ஒன்றை கடலுக்கு நடுவே கொண்டு சென்று வைப்பார். யாருடைய பணம் இது. சமாதியில் வடை, காபி வைப்பதையே நான் திட்டிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் தேவையில்லாத சேட்டை” என்றார் சீமான்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார், இன்று ( ஜூலை 24 ) சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது கடலில் கலைஞரின் பேனா சிலை திட்டம் பற்றிய விமர்சனங்கள் பற்றி கேட்கப்பட்டது.
‘அப்போது பதிலளித்த எ.வ.வேலு, “கலைஞருக்கு செய்வதென்பது தமிழ்நாட்டு மக்களின் நன்றிக் கடன் . தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அத்தனை முதலமைச்சர்களையும் விட அதிக அரசாணைகளை தமிழக மக்களின் நலனுக்காக அறிவித்தவர் கலைஞர்தான். வீடே இல்லாதவர்களுக்கு வீடு வழங்கியவர் , அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கியவர், அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கியவர். அதனால் அவருக்கு நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன். அவருக்கு கடலுக்கு நடுவில் பேனா சிலை வைப்பதை விமர்சிப்பவர்கள் அவருக்கு துரோகம் செய்வதாக அர்த்தம்” என்றும் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார் –