அமைச்சர் அனிதா மீது ஆவுடையப்பன் புகார்! சாதிச் சண்டையாகிறதா நெல்லை தேர்தல் களம்?

அரசியல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு ஆதரவாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரசாரத்தின்போது அமைச்சர் அனிதா பேசிய பேச்சு நெல்லையில் சமுதாய ரீதியில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன் நாங்குநேரி விஜயநாரணம் பகுதியில் பரப்பாடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சு திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

“ஆலடி அருணா யாருக்காவது துரோகம் பண்ணாரா? எந்த ஜாதிக்காவது விகல்பம் பண்ணாரா? அவரை வெட்டிக் கொன்னுட்டு, அந்த கேஸையே ஒரு பிள்ளைமார் மேல மாத்திட்டானுங்க. அவரும் பாவம் பாவம்னு தொலைஞ்ச நிலைகளெல்லாம் இருக்கு. இந்த ஊரை பொறுத்தவரைக்கும் எங்களது நினைவுக்கு வருவது யார்னா கராத்தே செல்வின். அவரது மனைவி ஊர் இது. அவரும் படுகொலை செய்யப்பட்டாரு” என்ற ரீதியில் ஆலடி அருணா பற்றியும் கராத்தே செல்வின் பற்றியும் நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் தொடர்ந்து பேசி வருகிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

அனிதாவின் இந்த பேச்சு நெல்லை தொகுதி முழுதும் வாட்ஸ் அப்புகளில் பரவ பெரும் அதிர்வாகிவிட்டது.
நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பன் கவனத்துக்கு இந்த வீடியோக்களை அவரது ஆதரவாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

‘அமைச்சர் அனிதா ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக பேசுகிறார். ஒரு தேர்தலுக்காக இப்படி பேசிவிட்டு அவர் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். ஆனால் இது திருநெல்வேலியில் அடுத்தடுத்து பல எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடும். அவரது மகள் முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை கூட  தனது தந்தை கொலை பற்றி இதுவரை தேர்தல் களத்தில் பேசியதில்லை. சாதி, மதத்துக்கு எதிராக திமுக பேசும் நிலையில் இதுபோன்ற பிரச்சாரம் தவறு’ என்று அவர்கள் ஆவுடையப்பனிடம் முறையிட, இதை அப்படியே திமுக தலைமையிடம் தெரிவித்திருக்கிறார் ஆவுடையப்பன்.

இதுகுறித்து திமுக தலைமையிடம் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது அனிதா, ‘நான் எந்த சமுதாயத்துக்கு எதிராகவும் பேசவில்லை. ஆலடி அருணா கொலைக்கு நியாயம் கேட்டு வாக்கு சேகரித்தேன். இது தேர்தல் உத்தி. தேர்தல் முடிவுகளில் இது தெரியவரும்” என்று பதிலளித்திருக்கிறார்.

நாம் இதுகுறித்து நெல்லை திமுக வட்டாரங்களில் பேசினோம்.
“நெல்லை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியதுமே பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தனக்கு நெருக்கமான திமுக நண்பர்களிடம் பேசத் தொடங்கிவிட்டார். நெல்லை வட்டாரத்தில் நயினார் முழுமையான பாஜக முகத்தோடு இல்லை. அவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர். சமுதாய ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் மற்ற கட்சிகளில் அவருக்கு அனேக நண்பர்கள் உண்டு. அந்த வகையில் திமுகவில் இருக்கும் தனது நண்பர்களை, ‘உம்ம கட்சிதான் போட்டியிடலைல… அப்புறம் என்ன உமக்கு… நான் பாத்துக்குறேன்’ என்ற ரீதியில் பேசி பலரையும் வளைத்துவிட்டார்.

இதுகுறித்த ரிப்போர்ட் முதல்வருக்கு சென்ற நிலையில்தான் மார்ச் 25 ஆம் தேதி நெல்லை பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வர், ‘இங்கே நம் கட்சி நிர்வாகிகள் சிலரே நயினாரோடு கள்ளத் தொடர்பில் இருக்கிறார்கள். உடனே அவங்க திருந்தலைன்னா கடுமையா நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்தார். இது மின்னம்பலத்தில் முதன் முதலில் டிஜிட்டல் திண்ணையில் செய்தியாக வெளியானது.

சில நாட்களில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து, ‘திருநெல்வேலியில் சரியில்லை… நீங்க அங்கையும் பாத்துக்கங்க’ என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

தலைவர் உத்தரவுப்படி திருநெல்வேலி தொகுதிக்குள் அனிதா ராதாகிருஷ்ணன் என்ட்ரியானார். ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் என திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முழுதும் பரந்திருக்கிற இந்து நாடார்களையும், குறிப்பாக அய்யாவழி கோட்பாட்டை பின்பற்றும் நாடார்களையும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கையோடு அணுகி அவர்களின் வாக்குகளைப் பெற முயற்சித்து வந்தார். இதில் கொஞ்சம் பலனும் அடைந்துகொண்டிருந்தார் நயினார். இது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ஆலடி அருணா கொலையை கையில் எடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆலடி அருணாவின் கொலை சம்பவம் பற்றி இம்மாவட்டத்திலுள்ள பலருக்கும் நன்கு தெரியும். அதை நினைவுபடுத்தி இந்து நாடார்கள், அவர்களில் கணிசமாக இருக்கும் அய்யாவழி நாடார்களின் வாக்குகளைக் கவர்வதற்கு ஒவ்வொரு கிராமமாக சென்று பேசி வருகிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அய்யாவழி சின்னம் தாமரைப் பூ. பாஜகவின் சின்னமும் அதுதான். இந்த அடிப்படையில் அவர்களை நயினார் தன் பக்கம் இழுக்க முயற்சித்தார். ஆனால் அனிதாவோ ஒவ்வொரு அய்யாவழி கோயில்களுக்கும் சட்டையை கழற்றிவிட்டுச் சென்று, ‘இந்தத் தாமரைக்கும் அந்த தாமரைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு தெரியுமா? உங்க மனசாட்சி படி ஓட்டு போடுங்க’ என்று சில பல விஷயங்களை உடைத்துப் பேசி வருகிறார்.

கிறிஸ்துவ நாடார் ஓட்டுகள் காங்கிரஸுக்கு வந்துவிடும், ஆனால் நயினாரின் பலத்த முயற்சியைத் தாண்டி அய்யாவழியினர் உள்ளிட்ட இந்து நாடார்கள், பிள்ளைமார்கள் ஓட்டுகளைப் பெற ஒரு கான்ட்ரவர்சியான வியூகத்தை கையிலெடுத்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இது எந்த அளவு கை கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்” என்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னமும் நெருக்கத்தில், ‘ஆலடி அருணா கொலை தொடர்பாக மறு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சின் அடிப்படையில் சில நாடார் அமைப்புகள் பகிரங்க கோரிக்கை வைக்கவும் தயாராகின்றன.

நெல்லையில் வெளியே அரசியல் ரீதியான தேர்தலாக தெரிந்தாலும், உள்ளே சாதி ரீதியான தேர்தலே நடக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

”தோனி வென்ற 3 ஐசிசி கோப்பைகளுக்கு எதுவும் ஈடாகாது” : கம்பீர் புகழாரம்!

பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை: பாஜக மா. செ பதவி நீக்கம்!

+1
0
+1
0
+1
1
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *