முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ கூறியுள்ளார்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (நவம்பர் 15 ) தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை
”திமுக தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது.
பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?,
முதல்வர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள்.
அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன்.
ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை. இதே நிலை திமுகவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.
ஐந்து வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துவிட்டு போனால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் திமுக வினர் நடத்தும் 45 பள்ளிகள் மற்றும் 45 கல்லூரிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.
மக்களை ஏமாற்றுகிறார்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் மதுவுக்கு எதிராக திமுக வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள். தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார். ராகுல் காந்திக்கு தமிழ் என்று சொல்ல கூட தெரியாது. மக்களுக்காக நல்லது செய்வதே எங்கள் மாடல்.
மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் இந்த ஆட்சி வேண்டுமா என்று யோசித்து பார்க்க வேண்டும்” என கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தெலுங்கு சினிமாவின் புதுமைப்பித்தன் : ‘சூப்பர்ஸ்டார்’ கிருஷ்ணா