மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

சென்னை மாநகராட்சியின் மேயராக மா.சுப்பிரமணியன் இருந்த போது கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை,  அதிகார துஷ்பிரயோகம் செய்து போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக  சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, ஊழல் தடுப்பு சட்டபிரிவுகளின்  கீழ்  பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில், “கடந்த 1998ம் ஆண்டு வீடு  வாங்கியது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பை வாங்கியது சிட்கோவுக்கு தெரியும். இதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எந்த மோசடியும் நடைபெறவில்லை. மோசடி என்றால் சிட்கோ புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் சிட்கோ புகார் அளிக்கவில்லை.

வீட்டுமனை ஒதுக்கீட்டை முறைப்படுத்த 2008ல் அரசு கொள்கை முடிவெடுத்த நிலையில், மோசடி என 2018ம் ஆண்டு புகார் அளிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் எவரும் விசாரிக்கப்படவில்லை. எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களை மகிழ்விக்க அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், இந்த வழக்கை ரத்து  செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், “இந்த வழக்கு தொடர்பான  குற்றப்பத்திரிகை விளக்கி வாதிடப்பட்டது. மேலும், குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்” என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமெரிக்காவின் 51வது மாகாணமாகிறதா கனடா? டிரம்ப் சொல்லும் காரணம்!

பிபின் ராவத் மரணத்திற்கு காரணம் இதுதான்… நாடாளுமன்றத்தில் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share