தி கிரேட் எம்ஜிஆர்… மோடி வெளியிட்ட வீடியோ… தலைவர்கள் புகழாரம்!

Published On:

| By Selvam

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த தினம் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது.

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எம்ஜிஆர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி, ‘தி கிரேட் எம்ஜிஆர்’ என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்.

எம்ஜிஆர் கருணை நிறைந்த ஆட்சியை நடத்தினார். அவரது ஆட்சியில் மருத்துவம், கல்வி, தொழில், பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்திய பின்னர், கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, ஆவடி நாசர், தா.மோ.அன்பரசன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், எம்ஜிஆருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன், விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர் எம்ஜிஆர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். புகழைப் போற்றி வணங்குகிறோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஒரு இயக்கத்தை தொடங்கி, தான் உயிரோடு இருக்கும் வரை அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருந்த எம்.ஜி.ஆர் பிறந்த தினம் இன்று.

தர்மத்தாயின் தலை மகனாக, தமிழ்நாட்டின் ஒளி விளக்காக, பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, நாடி வருவோரின் வறுமையை போக்கும் வள்ளலாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் வழியில் தொடர்ந்து பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

கடற்கரையில் கொத்துக் கொத்தாக மடிந்த பங்குனி ஆமைகள்… அரசுக்கு கோரிக்கை!

‘வடிவேலு சேரில் உட்கார்ந்தால், நாங்கள் தரையில்தான் அமர வேண்டும்’- நடிகர் ஜெயமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel