தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வருகின்றனர். பல கட்சித் தலைவர்களும் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
107 கிலோ பிரமாண்ட கேக்!
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 107 கிலோ பிரமாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.
இதயங்களை வென்ற தலைவர்!
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். அவரது படங்களில் வெளிபடுத்திய சமூக நீதி மற்றும் நேர்மை, வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவித்து வருகிறது” என பிரதமர் கூறியுள்ளார்.
துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்கும் வகையில்..
சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவி, பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப் பணியாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம். துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்” என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி ஏற்படுத்திட உறுதியேற்போம்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவின் உண்மைத் தொண்டனாக தன்னை அர்ப்பணித்து இறுதிமூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்த நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் இன்று… வறியவர்களுக்கு வள்ளலாகவும், எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் திகழ்ந்த புரட்சித் தலைவரை போற்றி வணங்குவதோடு, இதய தெய்வம் அம்மாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்திட இந்நாளில் உறுதியேற்போம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நேரு ஸ்டேடியத்தில் மோடி… பழிக்குப் பழிவாங்க திட்டமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அருண்விஜய்