சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதிமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 22) கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மத்தியில் மீண்டும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றார். 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக இன்று (ஜூன் 22) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அப்போது, நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியை மாநில அரசு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு மிகக்குறைவாக ரூ.276 கோடி மட்டுமே விடுவித்துள்ளது.
இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், 2021-22ஆம் ஆண்டு வரவு, செலவு திட்ட உரையில் ரூ.63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இத்திட்டம், திட்ட முதலீடு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார விவகாரங்களுடன் மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருப்பில் உள்ளது.
எனவே, உடனடியாக மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, புதிய நிதியை ஒதுக்க வேண்டும்” என தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் வார்னிங்!
சென்னை ரிப்பன் மாளிகையில் புதிய மாமன்ற கூடம்: கே.என்.நேரு அறிவிப்பு!