செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது மாநில அரசு உரிய முறையில் பாதுகாப்பு தரவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 29) ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநரை சந்தித்து இரண்டு முக்கியமான விஷயங்களை கோரிக்கையாக வைத்துவிட்டு வந்திருக்கிறோம்.
மிக முக்கியமான ஒன்று, நம்முடைய பாரத பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக ஜூலை 29 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார்.

அப்போது, அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய மாநில அரசு தனது பணியில் இருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் புகார் கொடுத்திருக்கிறோம்.
குறிப்பாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 150 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.
பிரதமரின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பாதுகாப்பு உபகரணமான மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை.
மெட்டல் டிடெக்டர்கள் பழுதடைந்து பேருக்காக மட்டும் காவல்துறையினர் கையில் வைத்திருந்தார்கள். பிரதமரின் பயணத்திற்கு பிறகு மத்திய அரசு அதிகாரிகள் இதுகுறித்து தமிழக அரசுக்கு சில அறிவுரைகள் வழங்கினார்கள்.
இந்திய பிரதமருக்கே பாதுகாப்பில் இப்படி குளறுபடிகளை செய்யும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பை அளிப்பார்கள்?
எனவே உடனடியாக மாநில அரசு இதற்கு பொறுப்பேற்று யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார் அண்ணாமலை.

மேலும் அவர், “ஆளுநரிடம் மற்றொரு கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்கிறதா என்று கண்காணிக்கை ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு, கள்ளக்குறிச்சி கலவரம், பிஎப்ஐ விவகாரம் என நடந்து கொண்டிருக்கும் நிலையில் உளவுத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என்று ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம்”.

இரண்டாவதாக, ” மத்திய அரசின் மிகப்பெரியத் திட்டம், கனவுத்திட்டம் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம். தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் குடிநீர் இணைப்புகளை மத்திய அரசு, மாநில அரசு மூலமாக கொடுத்திருக்கிறது.
இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் பாஜக தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த குடிநீர் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள்.
வெறும் பைப் மட்டும் புதைத்துவிட்டு குடிநீர் இணைப்பு தராமல் மாநில அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்திருக்கிறது.
பணியை முடிக்காமலே 69 லட்சம் இணைப்புகள் கொடுத்ததாக பொய் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.
இதை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் காட்டி புகார் அளித்திருக்கிறோம். ஆளுநர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்” என்று நம்புகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
கலை.ரா
அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்கினாலும்… மேயர் பிரியா முக்கிய அறிவிப்பு!
வாரத்தில் 4 நாள் வேலை: புது முயற்சியில் 100 நிறுவனங்கள்!
எதற்கும் ஆதாரமிருந்தால் வழக்கு தொடுக்கலாம், அதுவும் பல மாதங்கள் கடந்து குறை சொல்லுவதில் உள்நோக்கம் என்னவென்பதை மக்கள் அறிவார்கள்