முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
நான் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, அப்பள்ளி 75ஆவது ஆண்டு விழாவை வெள்ளைத் தங்க ‘உலோக’ (ப்ளாட்டினம்) விழாவாகக் கொண்டாடியது. என் நினைவில் அப்போது பதிந்தது எல்லாம் 50ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தங்க விழாவை விட, 75ஆம் ஆண்டு வெள்ளைத் தங்கம் மதிப்பு மிக்கது என்பதாகும். ஏனெனில் ஐம்பதைவிட எழுபத்தைந்து பெரியது என்ற கணித நியாயம். மற்றபடி எனக்கு அந்த வயதில், ப்ளாட்டினம் என்றால் என்னவென்றே தெரியது. அதே சமயத்தில் சமூகத்தில் உள்ள பெரியவர்கள், அரசியல் கட்சிப் பிரபலங்கள், நிறுவனங்கள், அரசுகள் என பிறந்த நாள் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு உலோகங்களின் பெயர் சொல்லி அழைப்பதும் ஒரு வகையான உயர் நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. உலோகங்களின் மதிப்புகள் (“இவரு தங்கமானவரு”) நமது கலாச்சாரத்தோடு இணைந்துள்ளன. இம்மாதிரியான சொல்லாடலில் உள்ள உலோகங்களின் பெருமை போற்றுவதில் காலனியத்தின் வரலாறு’ம்’ உள்ளது. அது குறித்த அலசலே இந்த வாரமும் மற்றும் வரும் ஒரு சில வாரங்களிலும் தொடர்ந்து எழுதப்படும்.
“மனிதர்களின் நுழைவுகளை ஒதுக்கும் மேற்குலகம், வர்த்தகத்திற்கு மட்டும் எல்லை இல்லை என்பதின் அரசியலை வரும் வாரங்களில் பார்க்கலாம்” எனப் போன வாரம் எழுதி முடித்திருந்தேன். இவ்வாக்கியத்திற்கு உலோக வியாபாரம், அவற்றின் அரசியல் ஒரு நல்ல உதாரணமாகும். நவீன உலகின் பொதுப்புத்தியானது உலோகங்களின் கண்டுபிடிப்புகள், அவற்றின் உபயோகங்கள் எல்லாம் மேற்குலகின் தொழில் புரட்சியுடன் தொடர்புப்படுத்தியதாகவே உள்ளது. ஆனால் வரலாற்றுப்படி பல உலோகங்கள் மேற்குலகிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து உபயோகத்தில் இருந்துவந்திருப்பது நமக்குத் தெரியவருகிறது. செம்பு (copper) ஒரு உதாரணம். நவீன சகாப்தத்தின் (நவீ. சகா.)9000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே தற்போதைய மத்தியக் கிழக்கு தரைக்கடல் நாடுகளில் செம்பு (தாமிரம்) உபயோகத்தில் இருந்தமைக்கு சாட்சியங்கள் உள்ளன. உதாரணாமாக உலகிலேயே பழமையான செம்பு ஆபரணம் இன்றைய வட ஈராக்கில், நவீ.சகா. 8700-ஆம் ஆண்டுகளுக்கு முன், உருவாக்கப்பட்டிருப்பதாக அகழ்வாராய்ச்சிகள் சொல்கின்றன.
இன்றைய எகிப்தில் நவீ.சகா 3100 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பு உபயோகத்தில் இருந்துவந்ததற்கான கண்டுபிடிப்புகள் ஆதாரத்துடன் இப்போது பொது வெளிக்கு வந்துள்ளன. சுமேரியாவில் (இன்றைய தெற்கு ஈராக்) செம்புச் சிலைகள் நவீ.சகா 3100ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக செம்பு அல்லது தாமிர உலோகம் உலகத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக புழக்கத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, தங்கம், வைரம், பவளம், மாணிக்கம், இரும்பு, எஃகு எனப் பல உலோகங்களும் மேற்குலகிற்கு வெளியே புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
ஆனால், இவ்வுலோகங்களை எல்லாம் தற்போது மேற்குலகின் இயந்திரப் புரட்சியோடு மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்ப்பதின் காரணம் என்ன? காலனியத்தின் அதிகாரங்களையும், வெள்ளை இனத்தவர்களையும் உலோகத்தின் இப்படிச் சொல்வதினால் கீழச் சமுதாயத்தின் கலாச்சாரப் பெருமையை கண்ணை மூடிக்கொண்டு பாடப்பட வேண்டும் என்று பொருளல்ல. மாறாக, மேற்குலகின் இயந்திர / தொழிற்புரட்சிப் பொருளாதாரத்தின் வெற்றியும் அவற்றின் பின்னிருக்கும் இயந்திரப் புரட்சிகளின் வர்ணனைகளும் காலனிய வேர்களில் இருந்தே ஆரம்பிக்கிறது என்பதாகும். இதனாலேயே, மனிதர்களின் கொண்டாட்டங்களை எல்லைகளையும் சுவர்களையும் கட்டித் தடுக்கும் மேற்குலகமானது உலோகங்களையும், இயற்கை வளங்களையும் எப்பாடு பட்டாவது தன் எல்லைக்குள் வைத்திருக்க விரும்புகிறது. அதற்காக தனது எல்லைக் கதவுகளை எப்போதும் திறந்து வைத்துள்ளது. முரண்பாடுள்ள இந்த அரசியல் நிலைப்பாடு இடதுசாரிகளுக்கு எதிரான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல; தற்போது சோஷலிசம் பேசி வரும் பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
செம்பு என்ற உலோகம் காலனிய அரசியலில் தொடர்ந்து அனுபவித்துவரும் முக்கியத்துவத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]
கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]