செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்

அரசியல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறல் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஜூன் 15) அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளார்களை சந்தித்த கண்ணதாசன், “செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அது மட்டும் அல்லாமல் மனித உரிமை ஆணையத்திற்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை செய்வதற்காக மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க வந்தேன்.

அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் சற்று காந்திருந்து அவரை சந்தித்தேன் . அவரை விசாரணை செய்த பொழுது, தான் கைது செய்யப்பட்ட போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தன்னை தரதரவென்று இழுத்து தரையில் போட்டதால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் சொன்னார் செந்தில் பாலாஜி.

தனக்கு இருக்க கூடிய இதய நோய் பற்றியும் , மூன்று அடைப்புகள் இதயத்தில் இருப்பதாகவும் , நெஞ்சுவலி காரணமாக தன்னால் தொடர்ந்து அதிகம் பேச முடியவில்லை என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜி தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளின் பெயர்களையும் என்னிடம் கூறியுள்ளார். ஏற்கனவே புகார் பெறப்பட்டது, தற்போதும் புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நாளை விசாரித்து முடிவு எடுக்கும் “ என்று கண்ணதாசன் கூறினார்.

மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் புகாரின் அடிப்படையிலும் வரலாம், தானாகவும் முன்வந்து விசாரிக்கலாம்.

நேற்று வந்த புகாரின் அடிப்படையில் தான் தற்போது செந்தில் பாலாஜியை சந்திக்க வந்துள்ளோம் என்று கூறினார்.

அமலாக்கத்துறை கடைபிடிக்க வேண்டிய விதிகளை முறையாக கடைபிடிக்க வில்லை என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கண்ணதாசன், ”எங்களுடைய விசாரணை வேறு. நீதிமன்றத்தின் விசாரணை வேறு” என்று பதிலளித்தார்.

’உடலில் காயங்கள் இருப்பதாக சொல்கிறீர்களே, நீங்கள் பார்த்தீர்களா?’ என்ற கேள்விக்கு,

“தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் , நெஞ்சுவலி என்று சொல்லியும் மருத்துமனைக்கு அழைத்து செல்லாமல் வாகனத்தில் ஏற்றி கீழே தள்ளி தன்னை துன்புறுத்தியதாக அவர் என்னிடம் கூறினார்.

உடலில் காயங்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர் தான் சொல்ல வேண்டும். அவர் சோர்வாக காணப்பட்டதால் காயத்தை நான் பார்க்க வில்லை” என்று கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சமரசம் செய்யாமல் களத்தில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *