மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது தற்கொலைக்கு சமம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 60 டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் வகையில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக கடந்த ஜூலை 31ஆம் தேதி பிரதமர் மோடியை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரு மாநிலங்களும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்” என கூறினார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 2) வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “38 முறை பேசியும் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் நடுவர் மன்றத்திற்கு சென்றோம்.
நேரடியாகவே பட்டேலும்-கலைஞரும், தேவகவுடா பிரதமராக இருந்தபோது அவரை வைத்துக்கொண்டே 3 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால் இந்த விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பினோம். பின்னர் வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
மேகதாது அணை குறித்து நமது பொறியாளர்கள் எந்த வழக்கிற்கு போனாலும் கர்நாடகா ஒரு பாதுகாப்பு கவசத்தை கொண்டு வரும்.
அதுஎன்ன வென்றால், ‘நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லிவிடுவார்கள். இதற்கு உச்ச நீதிமன்றமும் சரி என்று சொல்லி அனுப்பிவிடும்.
ஆனால் இது இழுத்துக்கொண்டு போகுமே தவிர, முடியவே முடியாது. தென் பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள் அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால் அவர்கள் இரண்டாண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்” என பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வியட்நாம் பிரதமர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
“மதுரை எய்ம்ஸ் தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம்” : ஆ.ராசாவுக்கு நட்டா பதில்!