டெல்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னை திரும்பி உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்டு 16) இரவு டெல்லி சென்றார். காலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமரை சந்தித்து முதல்வர் கோரிக்கை!
மாலையில், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழாவில் பங்கேற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் 44 செஸ் ஒலிம்பியாடின் தொகுப்பு புத்தகத்தையும், தமிழ்நாட்டின் ஆறு வகையான பாரம்பரிய தானியங்களையும் வழங்கினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்துக்கான நீட் தேர்வு விலக்கு மசோதா, காவிரி மேகதாது அணை விவகாரம், மாநில நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 17) இரவு சென்னை வந்தடைந்தார்.
நாளை அவசர ஆலோசனை கூட்டம்!
ஆன்லைன் ரம்மி தடை அவசர கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, கருத்துக்கேட்புக்கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!